உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத்திரமன்றி அத்தியவசிய சேவைக்கு அழைக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் இடர்கால கொடுப்பனவை வழங்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.நேற்று (17) அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமைச்சின் கீழ் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கு கொடுப்பனவு வழங்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை பாராட்டுவதுடன் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அமைச்சின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத்திரமன்றி தற்போதைய இடர்நிலையை கருத்திற்கொண்டு அத்தியவசிய சேவைக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் இக்கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருகிறோம்.
குறிப்பாக 2020/2021ம் ஆண்டுக்காலப்பகுதியில் பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு கொடுப்பனவாக 20,000 ரூபா மாத்திரமே வழங்கப்படும் நிலையில், அவர்களுக்கு வேறெந்த கொடுப்பனவும் கிடைப்பதில்லை. எனினும் அவர்கள் சுகாதாரத்துறைசார் அலுவலகங்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம், ஆகிய இடங்களில் கடமையாற்றுகின்றனர். அவர்களுக்கும் விசேட கொடுப்பனவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.