சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு விரைவில் கொவிட் 19 தடுப்பூசி- நாமல்
முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை விரைவுபடுத்தப்படவுள்ளதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரும், டிஜிட்டல் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பியகம ஏற்றுமதி திட்டமிடல் வலயத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 பரவலுக்கு மத்தியில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் தொடர்ச்சியாக உற்பத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் இதன்போது கவனத்திற்கொளளப்பட்டது.
தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்தும் சுகாதார அமைச்சுடன் இணைந்து தடுப்பூசி வழங்கல் செயற்பாடுகள் முன்னெடுப்பது குறித்தும் தேவைக்கேற்ப சுதந்திர வர்த்தக வலயங்களில் இடைதங்கள் சிகிச்சை நிலையங்களை அமைத்தல், மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தடுப்பூசி வழங்கல் செயற்பாடுகளை துரிதமாக்குவதற்கான தேவை நம்மிடம் உள்ளது. சுதந்தர வர்த்தக வலய ஊழியர்களுக்காக 130,000 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. அதிலிருந்து சுதந்திர வர்த்தக வலயங்களுக்காக ஒதுக்கிக் கொள்ள முடியும். வர்த்தக வலயங்களுக்குள்ளேயே தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது.
அனைவரினதும் ஒத்துழைப்புடன் கட்டுநாயக்கவில் இடைத்தங்கல் சிகிச்சை நிலையமொன்றை திறக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். பியகம மற்றும் ஏனைய சுதந்திர வர்த்தக வலயங்களில் தேவைக்கேட்ப செயற்பட முடியும். வர்த்தக வலயங்களுக்குள்ளே அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் சிகிச்சை நிலையம் அமைப்பது குறித்து யோசிக்கலாம். அதற்கான உதவிகளை நாம் வழங்கவேண்டும்.