அதிபர் ஆசிரியர்களின் கடன்களுக்கு சலுகை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்க நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்திருப்பதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டில் கொவிட் -19 தொற்றுநோய் தீவிரமாகப் பரவியுள்ளதனால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இவ் வருடம் மூன்று மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில். மாணவர்களுடைய கல்வியை நிகழ்நிலை மூலம் புதுப்பிப்பதற்காக தேவையான கருவிகளை மற்றும் டேட்டாக்களை அரசாங்க நிதியுதவி இன்றி தங்கள் தனிப்பட்ட செலவில் கொள்வனவு செய்வதன் மூலமே கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெறுகிறது. அரச சேவையில் 24 ஆண்டுகால கடுமையான சம்பள முரண்பாடுகள் காரணமாக ஆசிரியர்களும் அதிபர்களும் அல்லற்படுகின்றமை அனைவரும் அறிந்த விடயமாகும்.
தரம் 1 ஆசிரியரின் குறைந்தபட்ச தினசரி ஊதியம் சுமார் 1498 ரூபாய் ஆகும். 2-1 2 -2 3 -1 மற்றும் 3 -2 தரம் ஆசிரியர்களின் தினசரி சம்பளம் அதைவிடக் குறைவாகும். இந்தச் சூழ்நிலையில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் கடுமையான பொருளாதார கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, குருசேதா போன்ற பல்வேறு வங்கிக் கடன் திட்டங்களால் பெறப்பட்ட கடன்களுக்கான மாதாந்த தவணைகளையும் அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்த மாதத்திலிருந்து( ஜூன்) மீண்டும் பாடசாலைகள் திறக்கும் வரை கடன் தள்ளுபடி வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை கேட்டுக்கொள்கிறது.
மேலும், சில ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமது தனிச் சம்பளத்தில் மாத்திரமே வாழ்க்கையைக் கொண்டு நடத்துகின்றார்கள் என்பதுடன் தனியார் வகுப்புகள் நடத்துவது, வேறு பல வருமானங்களை நம்பி கடன் வாங்கிய ஆசிரியர்கள் அனேகமானோர் உள்ளனர் என்பதையும், இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் குறிப்பாக சுட்டிக் காட்டுகின்றோம்.
எனவே, மேலே குறித்து காட்டப்பட்ட நிலைமைகளுக்கு ஏற்ப நாட்டில் நாளுக்கு நாள் உயரும் வாழ்க்கை செலவுகள் மத்தியிலும், அவர்களின் மிகக் குறைந்த சம்பளத்துடன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுப்பதற்கு நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இந்தச் சலுகையை வழங்குவது உங்கள் பொறுப்பு என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம் என உபதலைவர் சுந்தரலிங்கம்
பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடிதத்தின் பிரதிகளை ஜனாதிபதி, கல்வி அமைச்சர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.