சிங்கப்பூர் பொதுவிடங்களில் புகைப்பிடித்தலுக்கான தடை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது என்று அந்நாட்டு சுற்றாடல்துறை துணை அமைச்சர் ஏமி கோர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பொதுப்பூங்காக்கள், தோட்டங்கள், 10 பொழுதுபோக்கு கடற்கரைகள் மற்றும் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் கீழ் நிருவாகிக்கப்படும் அழகான, தூய்மையான இடங்கள் உட்பட பலவிடங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் வகையில் இத்தடை கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் பொதுவிடங்களில் புகைத்தல் தடை
தற்போது தனியார் மற்றும் பொது வீடமைப்புத் தொகுதிகளுக்கு அண்மித்த பூங்காக்கள், நீர்நிலைகள் இயற்கை வனப்பூங்காக்கள் மற்றும் பாதுகாப்பான நடைபாதைகள், பேருந்து நிலையங்களில் இருந்து 5 மீற்றர் தொலைவில் உள்ள பகுதிகள், வெற்றுத்தளங்கள் ஆகியவற்றில் புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
ஜூலை முதலாம் திகதி தொடக்கம் திறந்த பொது இடங்களான வெறுமையான நிலம், மூடப்படாத நடைபாதைகள், பலமாடி கார் நிறுத்தங்கள், மேல் தளம் மூடப்படாத பகுதிகளில் புகைப்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. புகை வௌியேறாத, சொந்த வீடுகள் அல்லது கார்கள் போன்ற தனிப்பட்ட இடங்களிலும் புகைத்தல் தடை செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.