சிங்கப்பூருக்குள் குறுகிய கால அனுமதியில் நுழையும் வெளிநாட்டினருக்கு இலத்திரனியல் அனுமதி அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டு குடிவரவு, குடியகல்வு ஆணையம் அறிவித்துள்ளது.
இதுவரை நடைமுறையில் இருந்த கடவுச்சீட்டில் முத்திரையிட்டு வழங்கப்படும் நடைமுறை இனி இல்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இ-பாஸ் எனப்படும் இலத்திரனியில் அனுமதிச் சீட்டு முறை கடந்த ஆண்டு ஒக்டோபரில் சாங்கி விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வாரம் தொடக்கம் அந்நடைமுறை கட்டம் கட்டமாக அனைத்து பரிசோதனை நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குடிவரவுக்கான சோதனைகள் நிறைவடைந்த பின்னர் பயணிகளுக்கு இலத்திரனியல் அனுமதி அட்டை வழங்கப்படும். மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்கள் குடும்பத்தவர்களின் மின்னஞ்சல் முகவரியினூடாக அனுமதியை பெற முடியும்.
இவ்விலத்திரனியல் அனுமதி அட்டையில் வருகை அனுமதி விபரங்கள், பயண காலம், அந்நாட்டில் தங்க அனுமதிக்கப்பட்ட கடைசி நாள் போன்ற மிக முக்கியமான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
அத்துடன் சிங்கப்பூர் வருகைத் தருவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் குறுகிய கால பயணம் மேற்கொண்டுள்ள பயணிகள் அவர்களுடைய சிஎஸ்ஜி வருகை அட்டையை இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.