​போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை- எதிர்க்கும் ஆசிரியர் சங்கம்

​போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை- எதிர்க்கும் ஆசிரியர் சங்கம்

2021.01.18ஆம் திகதிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு அன்றைய நாளை சம்பளமற்ற விடுமுறையாக கணிப்பிடுமாறு அறிவுறுத்தப்படும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் 2021.01.19 ஆம் திகதிய கடிதம் தொடர்பான நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம், இலங்கையின் அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள, சுதந்திரமாக செயற்படும் தொழிற்சங்க உரிமையை நசுக்கும் செயற்பாடு எனவும் குறிப்பிட்டு, 2021.01.19 ஆம் திகதிய கடிதம் மீளப்பெறப்படவேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலினால் வடமாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

2021.01.18ஆம் திகதிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சம்பளமற்ற விடுமுறையாக கணிப்பிடுமாறு அறிவுறுத்தப்படும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் 2021.01.19 ஆம் திகதிய கடிதம் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

குறித்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக எமக்கும் அதிருப்திகள் உண்டு. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தொடர்பாகவும் எமக்கு விமர்சனம் உண்டு. விசேடமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக செயற்படும் ஜே.வி.பி.யின் தொழிற்சங்கமே இந்த ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியிருந்தது.

இடமாற்றச் சபையில் தீர்மானங்களை எடுத்துவிட்டு, ஆசிரியர்களைத் தவறாக வழிநடத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆயினும், ஆர்ப்பாட்டங்களுக்கு வந்தவர்களுடைய உரிமையை அடக்கும் வகையில், வடமாகாண கல்வியமைச்சு செயற்பட கூடாது. வடமாகாண கல்வியமைச்சின் 2021.01.19 திகதிய கடிதம் தொடர்பான செயற்பாட்டை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக மீளப்பெறவேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றோம்.

ஆர்ப்பாட்டம் செய்தமை தொழிற்சங்க உரிமையாகும். தொழிற்சங்க நடவடிக்கைக்காக விடுமுறை அறிவித்தோ, அல்லது விடுமுறை அறிவிக்காமலோ கூட ஆர்ப்பாட்டம் செய்யமுடியும். இதனை இலங்கை அரசியலமைப்பும், சட்டமும் ஏற்றுக்கொண்டுள்ளது. போராட்ட வழிமுறைகளை தொழிற்சங்கங்களே தீர்மானிக்கமுடியுமென சட்டம் ஏற்றுக்கொண்டுள்ளபோது, அவசியமற்ற வகையில் தாபனவிதிக் கோவையைத் தொடர்புபடுத்தி ஆசிரியர்களின் உரிமைகளை நசுக்க முயல்வது அடிப்படை உரிமை மீறலாகும்.

எனவே, தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் சுதந்திரமாக செயற்படும் உரிமையை, இலங்கையின் அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள விடயங்களைக் கவனத்தில்கொண்டு, பொருத்தமற்ற நடைமுறைகளால் உரிமைகளை நசுக்கும் செயற்பாடுகளை வடமாகாண கல்வியமைச்சு உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கை அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள தொழிற்சங்க உரிமைகளை நசுக்கும் செயற்பாடு வடமாகாண கல்வியமைச்சால் மீளப்பெறப்படவில்லையாயின், இலங்கை ஆசிரியர் சங்கம் உரிமைகளை வென்றெடுப்பதற்காய் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image