இலங்கை மின்சாரசபையில் 90 வீத ஊழியர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தில்

இலங்கை மின்சாரசபையில் 90 வீத ஊழியர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தில்

இலங்கை மின்சாரசபை ஊழியர்களில் 90 வீதமானவர்கள் நாளை (08) கடமைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் என்று சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மூன்றாண்டுகளுக்கு ஒரு தடவை வழங்கப்படும் சம்பள உயர்வு இதுவரையில் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் இலங்கை மின்சாரசபையில் பணியாற்றும் 28,000 ஊழியர்கள் 25,000 பேர் பணிக்கு நாளை சமூகமளிக்கமாட்டார்கள். பொதுவாக மின்சாரசபை ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை சம்பள உயர்வு வழங்கப்படும். இறுதியாக 2018ம் ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் சம்பள உயர்வு வழங்கப்பட்டிருக்கவேண்டும். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஊழியர்கள் சுகயீடு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

அதிக ஊழியர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்சாரசபை தலைமையகத்திற்கு முன்பாக நாளைய தினம் போராட்டமொன்றை நடத்தவும் தீர்மானித்துள்ளோம்..

 சம்பள உயர்வை தாமதமாக்கவேண்டாம் என்றும் கடந்த 2020 செப்டெம்பர் மாதம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் ஆராய சம்பள குழுவொன்றை அமைப்பதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும உறுதியளித்தார். எனினும் குறித்த குழுவினூடாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. பெப்ரவரி மாதம் 20ம் திகதிக்கு தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு கூட்டு ஒப்பந்தமொன்று உருவாக்கப்பட்டு பிரச்சினை தீர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

கொரோனா காரணமாக நாம் தீர்வு கிடைக்கும் வரையில் பொறுமையாக காத்திருந்தபோதிலும், அனைத்து தொழிற்சங்கங்களும் அவற்றின் முன்மொழிவுகளை குறித்த தினத்திற்கு முன்பாக வழங்கிய போதிலும் உரிய தீர்வு வழங்கப்படவில்லை. இதில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை. நாம் ஊழியர்களின் அநீதிக்கு எதிராகவே போராடுகிறோம். அரசாங்கம் எமது கோரிக்கைக்கு செவிமடுக்க தவறும்பட்சத்தில் அனைத்து நிலையங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வகையில் நாடு தழுவிய வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image