பெண் தொழிலாளி உட்பட 8 பேர் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்

பெண் தொழிலாளி உட்பட 8 பேர் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்

(மா.பிரபா)

மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஓல்ட்டன் தோட்டத்தை சேர்ந்த எட்டு தொழிலாளர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதிமன்ற நீதவான் நேற்று (19) உத்தரவிட்டுள்ளார்

ஹொரன பிலான்டேசன் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஓல்ட்டன் தோட்டத்தின் நான்கு பிரிவுகளில் உள்ள சுமார் 300 தொழிலாளர்கள் கடந்த மூன்றாம் திகதி முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். தோட்டத்தின் முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர்களின் செயற்பாடுகள் திருப்பதியற்றதாக உள்ளதால் தம்மால் அவர்களின் கீழ் பணியாற்ற முடியாது அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த தொழிலாளர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த மூன்றாம் திகதி முகாமையாளர்கள் வேண்டாம் என்ற கூறி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டதுடன் ஐந்தாம் திகதி சம்பள உயர்வுக்கான அடையாள வேலை நிறுத்ததிலும் ஈடுப்பட்டனர். இதன் போது தேயிலை பெட்டிகளை தோட்ட தொழிற்சாலையில் இருந்து விற்பனைக்காக வழமையாக கொண்டு செல்லும் செயற்பாட்டின் போது அதை தடுத்த தம்மை முகாமையாளர்கள் தாக்கியதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிகழ்வின் எதிரொலியாக ஒல்ட்டன் தோட்ட தொழிலளர்களால் முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் உடனடியாக இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கூறி பணிபகிஸ்கரிப்பை முன்னெடுத்து வந்தனர். இந்த பணிபகஸ்கரிப்பின் போது தமது தொழிற்சங்கங்கள் தம்மை கைவிட்டு விட்டதாகவும் இவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த பணிபகிஸ்கரிப்பின் காரணமாக இந்த மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட வேண்டிய கடந்த மாத வேதனம் வழங்கப்படாத நிலையில் தொழில் ஆணையாளர் பணிபுரையின் படி இம்மாதம் 13 ஆம் திகதி தொழிலாளர்களுக்கு முகாமையினால் வேதனம் வழங்கப்பட்டதுடன் 15ஆம் திகதி முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதாகவும் உடன்பாடு ஏற்பட்டதாக தோட்ட முகாமை தெரிவித்தது.

இருந்த போதும் வேதனத்தை பெற்ற பின்னர் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாமல். முகாமையார்கள் வெளியேற வேண்டும் என்று தொடர் பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வந்த நிலையில் 17 திகதி புதன்கிழமை முகாமையாளரையும் உதவி முகாமையாளரையும் தொழிலாளர்கள் தாக்க முற்பட்டதாக மஸ்கெலிய காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
முகாமையின் முறைப்பாட்டின் அடிப்படையில் எட்டு ஆண் தொழிலாளர்களையும் ஒரு பெண் தொழிலாளியையும் கைது செய்த மஸ்கெலிய பொலிசார்நேற்று அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் போதே இவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டதாக மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபேசன் தெரிவித்தார்.

Author’s Posts