1,000 ரூபா சம்பள உயர்வுக்கு இறுதி முடிவில்லை: காய்நகர்த்தும் கம்பனிகள்

1,000 ரூபா சம்பள உயர்வுக்கு இறுதி முடிவில்லை: காய்நகர்த்தும் கம்பனிகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் நேற்று நடைபெற்ற கூட்டம் இறுதி முடிவு எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம், சம்பள நிர்ணய சபையின் உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று (19) நடைபெற்றது.

பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் சார்பில் ஒருவரும் தொழிற்சங்கங்கள் சார்பில் 8 பேரும் கலந்துகொண்டிருந்தனர்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் சார்பில் ஒருவர் மாத்திரமே வருகை தந்ததால், பேச்சுவார்த்தையை காலம் கடத்த வேண்டிய தேவை சம்பள நிர்ணய சபைக்கு ஏற்பட்டதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்தார்.

சகல அதிகாரங்கள் கொண்ட அரசாங்கத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் எவ்வாறு அழுத்தம் கொடுக்க முடியும் எனவும் கிட்ணன் செல்வராஜா கேள்வி எழுப்பினார்.

சம்பள நிர்ணய சபையின் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 900 ரூபா அடிப்படை சம்பளமும், 100 ரூபா வரவு-செலவுத் திட்டக் கொடுப்பனவும் என 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்திருந்தார்.

இந்த தீர்மானத்திற்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கு கடந்த 15ஆம் திகதி மதியம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. குறித்த காலப்பகுதிவரையில் 100 இற்கும் அதிகமான ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினம் கூடிய சம்பள நிர்ணய சபையின் பேச்சுவார்த்தையின் கூட்டம் இறுதித் தீரமானமின்றி நிறைவடைந்துள்ளது.

நேற்றைய தினம் தொழில் ஆணையாளர் தலைமையில் கூடிய, சம்பள நிர்ணய சபையில் பெருந்தோட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 தொழிற்சங்களும், அரசாங்கத்தின் மூன்று பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்த நிலையில், கம்பனிகள் சார்பில் ஒருவர் மாத்திரமே கலந்துகொண்டுள்ளார்.

சம்பள நிர்ணயசபை கூடுவதற்கு குறையந்தபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 5 ஆகும். இதில் இருவர் தொழிற்சங்க பிரதிநிதிகளாகவும், மேலுமிருவர் கம்பனி பிரதிநிதிகளாகவும் ஏனையவர் அரசாங்க பிரிதிநிதியாகவும் காணப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image