இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
தேசிய ஊடகக் கொள்கையொன்று முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும், அது தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார,
இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகார சபைச் சட்ட மூலம் பெரும்பான்மை உடன்பாட்டின் அடிப்படையில் பாரிய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இறுதி சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.
ஊடகவியலாளர்களுக்கான பட்டய நிறுவனத்தை உருவாக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு முறையான பயிற்சியுடன் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழையும் வழங்க எதிர்பார்க்கிறோம்.
தேசிய ஊடகக் கொள்கையொன்றை முன்வைக்க எதிர்பார்க்கப்படுகிறது. அது தற்போது அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊடக செயற்பாடுகளுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட மாட்டாது என்பதையும் விசேடமாக குறிப்பிட வேண்டும். - என்றார்.