E8 விசா பிரச்சினையை தீர்க்க வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலையீடு
E8 விசா முறையின் கீழ் தெனகொரியாவிற்கு தொழிலாளர்களை அனுப்புவது குறித்து மேலும் ஆராய்ந்து, தொடர்பான சட்ட நிலைமைகளை ஆய்வு செய்து, எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் பருவகால வேலைகளுக்காக E8 விசாவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முறைக்கு புறம்பாக சில தரப்பினரின் தலையீடு காரணமாக, அந்த தொழில் வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் தொழிலாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பணியகம் கூறுகிறது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், இந்த விடயம் தொடர்பாக பணியகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய பணியாளர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி குறித்த தீர்மானத்திற்கு வந்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க, பொது முகாமையாளர் டி.டி.பி சேனாநாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மூலம் - லங்காதீப