பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை; அமைச்சர் பணிப்புரை

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை; அமைச்சர் பணிப்புரை

அத்தியாவசிய சேவையான மின் விநியோகத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில், பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்குமாறு துறைசார் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு கடிதம் ஒன்றினூடாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

கடந்த 3 ஆம், 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் சில ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பினால் மின்சாரக் கட்டணம் செலுத்தும் கருமபீடங்களை மூட வேண்டியேற்பட்டதாகவும் பொதுமக்கள் சேவை வழங்கல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகவும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமையும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சார சபை நிர்வாகத்தினால் கடந்த 2 ஆம் திகதி அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்புலத்தில் திட்டமிட்டு அல்லது சட்டத்திற்கு புறம்பாக அல்லது சுகயீன விடுமுறையை அடிப்படையாகக் கொண்டு சேவைக்கு சமூகமளிக்காமல் சில ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அமைச்சரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய ஊழியர்கள் குறித்த தகவல்களை அமைச்சுக்கு வழங்குமாறும், அவர்களை சேவையிலிருந்து இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இலங்கை மின்சார சபை தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image