இலங்கை மின்சார சபையை ஆறாக பிரிக்கும் உத்தேச சட்டமூலத்திற்கு தொடர்ந்தும் எதிர்ப்பு
இலங்கை மின்சார சபையை 6 பிரிவுகளாக பிரிப்பது தொடர்பிலான உத்தேச சட்டமூலத்திற்கு இன்று மூன்றாவது நாளாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
03 நாட்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்த இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தினர், கொழும்பு கோட்டையிலுள்ள பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இன்று பகல் ஒன்றுகூடியுள்ளனர்.
உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இலங்கை மின்சார சபையின் உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், இலங்கை மின்சார சபை பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் அபாயம் நிலவுமென அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், வர்த்தகம், வழங்கல் , கொள்முதல் ஆகியவை நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் கீழ் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும் என்று புதிய வரைபு முன்மொழியப்பட்டுள்ளது.
இது தவிர, மின்சாரத்துறையின் ஒழுங்குமுறை, உரிமம் போன்ற பிரச்சினைகளுக்கு நிறுவனங்களை நிறுவுவதற்கான முன்மொழிவுகளும் இதில் அடங்கியுள்ளன.