பெற்றோலிய தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது

பெற்றோலிய தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக தொழிற்சங்க ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது.

 

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக நேற்று முன்தினம் முதல் பெற்றோலிய தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரகத்தை முன்னெடுத்துள்ளனர்.

 

நிறைவேற்று உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் தவிர ஏனைய தொழிற்சங்கங்கள் இந்த சத்தியாகிரகத்தில் இணைந்துள்ளன.

 

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவையை பெற்றுக்கொள்ளும் அதிக வருமானம் கொண்ட சுமார் 600 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 04 சர்வதேச நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

 

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதிய எரிபொருள் இருப்புக்கள் உள்ளதாகவும் விநியோகம் தொடர்வதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

காவல்துறையினர் எரிபொருள் களஞ்சியத்தை பாதுகாத்து விநியோக நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தொழிற்சங்கங்கள், ஊழியர்களை கடமைக்கு செல்லவிடாமல் தடுத்ததால், எரிபொருள் விநியோகத்தில் வழக்கமான தாமதம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் அல்லது ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கஞ்சன விஜேயசேகர எச்சரித்துள்ளார்.

 

ஊழியர்களின் பணி அல்லது அத்தியாவசிய சேவை உத்தரவுகளை மீறும் வகையில் செயல்பட்டால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

அத்துமீறுவோரை பணிகளில் இருந்து நீக்குவது குறித்து பரிசீலிக்க தேவையான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் திணைக்கள தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image