இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வை அடுத்து, அரசாங்கத்துடன் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டை எட்டியிருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்,
இந் நிதி வசதிச் செயற்திட்டத்தின் நோக்கங்களுக்கு அமைவாக 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படல், கடன்மறுசீரமைப்பில் முன்னேற்றம் எட்டப்படல் உள்ளிட்ட மிக முக்கிய காரணிகளை அடிப்படையாககக் கொண்டே இந்த இணக்கப்பாட்டுக்கு தமது பணிப்பாளர் சபை ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு நாடு முகங்கொடுக்க நேர்ந்த தீவிர பொருளாதார நெருக்கடியை அடுத்து, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச்செயற்திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்தது.
அதற்கமைய முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதன் நீட்சியாக முன்னெடுக்கப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மீளாய்வுகளை அடுத்து இரண்டாம், மூன்றாம் கட்ட கடன்நிதியும் நாட்டுக்கு விடுவிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தேர்தலின் ஊடாக ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை அடுத்து கடும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாட்டுக்கு வருகைதந்திருந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் கடந்த 17 - 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வை முன்னெடுத்திருந்தனர்.
இம்மீளாய்வின் பிரகாரம் இலங்கை அரசாங்கத்துடன் எட்டப்பட்டிருக்கும் இணக்கப்பாடுகள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளால் சனிக்கிழமை (23) மு.ப 11.00 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர், பிரதித்தலைவர் கற்ஸியரினா ஸ்விரிட்ஸென்கா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இலங்கையின் சமகால பொருளாதார நிலைவரம் மற்றும் எதிர்கால எதிர்பார்க்கைகள் குறித்தும், மூன்றாம் கட்ட மீளாய்வு குறித்தும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:
உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு
சர்வதேச நாணய நிதியத்தினால் 4 வருடகாலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச்செயற்திட்டம் குறித்து மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டை எட்டியிருக்கிறோம்.
இந்த உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளிக்கவேண்டியிருப்பதுடன், அதனைத்தொடர்ந்தே நான்காம் கட்டமாக 333 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்கு வழங்கப்படும். பணிப்பாளர் சபையின் ஒப்புதலைப் பெறுவதற்கு விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் நோக்கங்களுக்கு அமைவாக 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தை சமர்ப்பித்தல் உள்ளடங்கலாக ஏற்கனவே இணங்கிய முன்நடவடிக்கைகளைப் பூர்த்திசெய்யவேண்டும்.
அதுமாத்திரமன்றி கடன்சீரமைப்பு செயன்முறை உரிய காலப்பகுதியில் பூர்த்திசெய்யப்படும் என்ற நம்பிக்கை வழங்கக்கூடியவாறு கடன்மறுசீரமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டுதல் உள்ளடங்கலாக நிதியியல் உத்தரவாதம் சார்ந்த கடப்பாடுகளையும் நிறைவேற்றவேண்டும்.
வரவேற்கத்தக்க பெறுபேறுகள்
அதேவேளை விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் ஆதரவுடன் இலங்கையினால் முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வரவேற்கத்தக்க பெறுபேறுகளைத் தந்திருக்கின்றன. அதற்கமைய கடந்த ஜுன் மாதத்துடன் முடிவடைந்த 4 காலாண்டுகளில் இலங்கையின் பொருளாதாரமானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 4 சதவீதத்தினால் விரிவடைந்திருக்கிறது.
பொருளாதாரத்தின் சகல துறைகளும் விரிவடைவதற்கான குறிகாட்டிகள் தென்படுகின்றன. இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டில் சராசரி பணவீக்கம் 0.8 சதவீதமாகத் தொடர்கிறது. கடந்த ஒக்டோபர்மாத இறுதியில் மொத்த கையிருப்புக்களின் பெறுமதி 6.4 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்திருப்பதுடன், குறிப்பிடத்தக்க நிதியியல் மறுசீரமைப்புக்களை அடுத்து அரச நிதி வலுவடைந்திருக்கிறது.
சமூகப்பாதுகாப்பு செலவின இலக்கை எட்டுவதில் தாமதம்
அதேபோன்று விரிவாக்கப்பட்ட நிதி வசதிச்செயற்திட்டத்தின் கீழான சகல எண்கணிய மற்றும் இலக்கிடப்பட்ட நடவடிக்கைகளில் 'சமூகப்பாதுகாப்பு செலவின இலக்கு' தவிர்ந்த ஏனைய அனைத்தும் ஜுன் மாத மற்றும் செப்டெம்பர் மாத இறுதியில் உரியவாறு பூர்த்திசெய்யப்பட்டிருக்கின்றன. அத்தோடு தேர்தல்களின் விளைவாக சில முக்கிய மறுசீரமைப்புக்களை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு நம்பிக்கை அளிக்கிறது
நாணய நிதியத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் இச்செயற்திட்ட இலக்குகளை அடைந்துகொள்வதில் புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதானது, எமது நம்பிக்கையை அதிகப்படுத்தியிருப்பதுடன் கொள்கைகளில் தொடர்ச்சித்தன்மை பேணப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்திருக்கிறது.
மிகக்கடின முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை நிலையான மீட்சிப்பாதையில் முன்நகர்த்திச்செல்வதற்கும் மறுசீரமைப்பு செயன்முறைகளைத் தொடர்வது இன்றியமையாததாகும்.
அத்தோடு பொருளாதார நெருக்கடியினால் நாட்டில் வாழும் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்ட நிலையில், பொருளாதார வளர்ச்சியின் மூலம் கிட்டும் நன்மைகள் சகல தரப்பினருக்கும் பொருத்தமான முறையில் பங்கீடு செய்யப்படுவது அவசியமாகும்.
வறிய, நலிவுற்ற சமூகப்பிரிவினர் பாதுகாக்கப்படவேண்டும்
மேலும் பெரும்பாகப் பொருளாதார உறுதிப்பாட்டைப் பேணுவதும், கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதும் இலங்கையின் சுபீட்சத்துக்கு மிக அவசியம் என்பதுடன், தொடர் வருமானமீட்டல் முயற்சிகள் மற்றும் செலவினக்கட்டுப்பாடுகள் என்பன 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்படவேண்டும். அதேவேளை இக்கடினமான சூழ்நிலையில் வறிய மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.
அதன்படி சமூகப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செலவினங்களை முழுமைப்படுத்துவதும், அஸ்வெசும உள்ளிட்ட சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்கள் வாயிலாக உள்வாங்கப்படும் தரப்பினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் முக்கியமானதாகும்.
கடன்மறுசீரமைப்பின் அடுத்தகட்டம்
அடுத்ததாக இலங்கையினால் அண்மையில் பிணை முறிதாரர்களுடன் எட்டப்பட்ட இணக்கப்பாடு, நாட்டின் கடன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்திய மிகமுக்கிய நகர்வு என்பதுடன், அடுத்தகட்டமாக வர்த்தகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்திசெய்வதுடன் இருதரப்புக் கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடு முழுமைப்படுத்தப்படவேண்டும் என்று நாணய நிதிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மூலம் - வீரகேசரி