இடமாற்ற பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆசிரியர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வை வலியுறுத்தி, கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடத்தப்பட உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பல ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்க உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும், 10 ஆண்டுகள் மற்றும் வருடாந்த இடமாற்றங்கள், குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய, அடுத்த மாதம் 17 ஆம் திகதி முதல் நடைமுறையாகும் என கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது.
விசேட மேன்முறையீட்டின்கீழான ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய இடமாற்றங்கள் இவ்வாறு அமுலாகும் என அறிக்கை ஒன்றின் மூலம் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஆசிரியர்களின் இடமாற்றம் மூலம், கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், அது குறித்து அதிபர் ஊடாக முன்வைக்கப்படும் மேன்முறையீடுகள், விசேட மேன்முறையீட்டு குழுவில் ஆராயப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.