சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் எழுதுவது தொடர்பான தீர்மானத்தினால் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை, பாராளுமன்றத்திடமே ஒப்படைக்கப் போவதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச சபையில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட கட்டளைச் சட்டம் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக விடப்பட்டு அதனை நிறைவேற்றும் பொறுப்பை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஒப்படைக்கப் போவதாக தெரிவித்த அவர், அது சபையில் நிராகரிக்கப்பட்டால் கட்டளைச் சட்டம் செல்லுபடியற்றதாகிவிடும் என்றும் தெரிவித்தார்.
சட்ட ஆய்வுக் கவுன்சில் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆகிய இருதரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே.எனினும், அதில் ஒரு இணக்கப்பாட்டை எட்டிக் கொள்வதற்காக கடந்த நான்கு மாதங்களாக, தாம் மேற்கொண்ட முயற்சிகள் சாத்தியப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்து நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.
இது தற்போது புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் அதற்கு தீர்வு காணப்பட வேண்டும். அதற்காகவே அந்தப் பொறுப்பை பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அத்துரலிய ரதன தேரர் முன்வைத்த விசேட கூற்றொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், சபையில் மேலும் தெரிவித்ததாவது,
சட்டக் கல்லூரி தொடர்பான விடயங்களை சட்ட ஆய்வுக் கவுன்சிலே மேற்கொள்கின்றது.
ஆங்கில மொழியில் மாத்திரமே சட்டக் கல்லூரி பரீட்சை எழுதப்பட வேண்டும் என்ற விடயம் கட்டளைச் சட்டமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.எனினும், அது இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த வகையில் சட்ட ஆய்வு கவுன்சிலின் காரணங்களும் ஏற்றுக்கொள்ளத் தக்கவையே.
ஆங்கில மொழியில் பரிச்சயமான சட்டத்தரணிகள் குறைவடைவதை தடுப்பதற்கும்,அதேவேளை வெளிநாடுகளில் சட்டக் கல்வி கற்று இங்கு வந்து பணிபுரியும் போது, ஆங்கில மொழியில் பரிச்சயம் இல்லாதவர்கள் புறக்கணிக்கப்படுவதை தவிர்க்கும் வகையிலுமே அந்தக் கவுன்சில் இத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை நூற்றுக்கணக்கான சட்டக் கல்லூரி மாணவர்கள் என்னை சந்தித்து அது தொடர்பில் கலந்துரையாடி மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர். சட்டக் கல்லூரி பரீட்சையை தமிழ் அல்லது சிங்கள மொழியில் எழுதவும் அதன் பின்னர் தாம் ஆங்கில மொழியில் திறமையை வெளிப்படுத்த முடியும் என்றும் அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டனர்.
உண்மையில், நானும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் கூட எமது தாய் மொழியிலேயே சட்டக் கல்லூரி பரீட்சைக்குத் தோற்றினோம். அதன் பின்பு ஆங்கில மொழியில் திறமையை வெளிக்காட்டினோம். இந்த கட்டளைச் சட்டம் உருவாக்கப்படும் போதே அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை ஒரே ஒரு தடவை அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர இதுவரை அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
மூலம் - தினகரன்