மலையக மாணவர்களுக்கு விஷேட தொழிற் பயிற்சித் திட்டம்

மலையக மாணவர்களுக்கு விஷேட தொழிற் பயிற்சித் திட்டம்

க.பொ.த. உயர்தரத்துக்கு செல்ல முடியாத மலையக இளைஞர், யுவதிகளுக்கு விஷேட தொழிற்பயிற்சித் திட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி பதுளையில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பின்னர் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே உயர்தரத்தில் கல்வியைத் தொடர்கின்றனர். பல்வேறு திறமைகளுள்ள மாணவர்கள் சாதாரண தரத்தின் பின்னர் உயர்தரத்துக்கு செல்லமுடியாது தொழிலின்றி அலைய நேரிட்டுள்ளது.

இத்தகைய இளைஞர், யுவதிகளை அடையாளம் கண்டு கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களூடாக அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். இந்நோக்கிலே, இவ்விஷேட திட்டம் முதற்கட்டமாக 11ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ளஅறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மலையக இளைஞர் யுவதிகளிடத்தில் பலதரப்பட்ட திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. இவற்றை வெளிக்கொணர்வதற்கு வழிகாட்டல்கள், விழிப்புணர்வுகள், தொழில்சார் பயிற்சிகள் அவசியமாகின்றன. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் உரிய அடைவை எட்டாதோர் பின்னர் உயர்தரத்துக்கு செல்லமுடியாமலும், தொழிலின்றியும் அவலப்படுவதை காணமுடிகிறது.

இதனால்,இவர்கள் மனதளவில் வலுவிழந்து தவறான பாதைகளையும் தேர்ந்தெடுத்து விடுகின்றனர். நமது நாட்டின் எதிகாலமே இளைஞர் யுவதிகளின் கைகளில்தான் தங்கியிருக்கிறது.

ஆகவே அவர்களுக்கு கைகொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்கு இருக்கவேண்டும். அந்தவகையில்தான் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களூடாக இளைஞர், யுவதிகளின் திறமைக்கேற்ப தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்தவகையில் ,அமைச்சின் செயலாளர், தொழிற்பயிற்சி நிலையங்களின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிராந்திய பணிப்பாளர்கள், செயலாளர்கள் ஆகியோரது ஆலோசனைகளுடன் கல்வி இராஜாங்க அமைச்சரின் கண்காணிப்பின் கீழ் 11ஆம் திகதி பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு பயிற்சிக்கான ஆரம்ப செயலமர்வு நடைபெறவுள்ளது.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மார்க்கண்டன் ரூபவதனன், ஆசிரியர் ஆலோசகர் (ஓய்வு நிலை) எஸ். பிரபாகரன், பதுளை தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (Naita) தொழில் ஆலோசகர் ஏ.கே.எல். சத்துரங்க, பதுளை தொழிநுட்ப கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் ( Tec ) ஆலோசனை அதிகாரி சாமிக்க சுரங்க, பதுளை உயர்தொழில்நுட்ப கல்லூரி ஆலோசனை அதிகாரி ரங்கண விதானகமகே ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image