பொது நிர்வாக  அமைச்சின் செயலாளரை பதவி நீக்க முடியாது

பொது நிர்வாக  அமைச்சின் செயலாளரை பதவி நீக்க முடியாது
பொது நிர்வாக  அமைச்சின் செயலாளரை பதவி நீக்கம் செய்ய முடியாதென பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு அமைச்சரவையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தீர்வுகள் எட்டப்படும் இவ்வேளை யில் அதற்கான எத்தகைய உத்தரவும் அரசாங்கத்தால் பிறப்பிக்கப்படவில்லையென்பதை சபையில் சுட்டிக் காட்டிய பிரதமர், எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் தவறான குற்றச்சாட்டுகளை வைத்து பொது நிர்வாக  அமைச்சின் செயலாளரை பதவி நீக்கம் செய்ய முடியாதென்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைச்சரவையில் எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. கட்டுப்பணம் செலுத்துவதை நிறுத்துமாறு கோரும் சுற்றறிக்கையை வெளியிட நான் ஆலோசனை வழங்கவில்லை. அந்த வகையில் தவறான கருத்துக்களை வைத்துக் கொண்டு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை பதவி நீக்க முடியாது.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானம் எடுக்க வேண்டும்.

எனினும் நாட்டின் நிலைமை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும், அமைச்சரவைக்கும் உள்ளது. நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. கட்டுப்பணம் செலுத்தல் பணியிலிருந்து மாவட்ட செயலாளர்களை விலகுமாறு அமைச்சரவையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image