பாடசாலை மாணவர்கள் பகுதி நேரமாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் வகையில் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தொழில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
16 வயதுக்கும் 20 வயதுக்கும் உட்பட்ட பாடசாலை மாணவ மாணவிகள் பகுதி நேரம் தொழில் செய்யும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது மாணவர்கள் தொழிற்சூழலுக்கு பழக்கப்படாதவர்களாக இருக்கின்றமையினால் தொழிற்றுறையில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.
இவ்வயதில் மாணவர்கள் மாதாந்தம் 20 மணி நேரம் பகுதி நேரமாக பணியாற்ற முடியும். அப்பணிக்காலத்திற்கு அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான அனுமதியை தனியார்நிறுவனங்களுக்கு வழங்கப்படும். அக்காலப்பகுதியில் அம்மாணவர்களுக்கு நிரந்தர தொழில்வாய்ப்பு வழங்க முடியாது. ஒழுங்கான பயிற்சி வழங்கப்படவேண்டும்.
தற்போது இளைஞர்கள் தொழில் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட வயது 16 ஆகும். புதிய திருத்தத்திற்குப் பின்னர் மாணவர்களும் தொழில் செய்யும் வாய்ப்பினைப் பெறுவார்கள்.
அபாயகரமான தொழில்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள 72 துறைகள் உள்ளன. அவற்றில் அம்மாணவர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது. பகுதி நேரம் தொழில் செய்யும் போது சமூக பாதுகாப்பு முறைகளான ஊழியர் நம்பிக்கை நிதியம், சேமலாப நிதியம் என்பவற்றை வழங்குவது தொடர்பில் பிரச்சினைகள் எழும். அவற்றுக்கும் ஏற்றாற்போன்று சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது..
முதலீட்டுக்கு ஏற்றாற்போன்ற உழைக்கும் வர்க்கத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
அருண