கடவுச்சீட்டு பெற்றுத்தருவதாக பணம் பெற்ற நபர் கைது- கண்டியில் சம்பவம்
ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையினூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுத் தருவதாக பணம் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் குடிவரவு குடிகல்வு திணைக்கள முன்னால் ஊழியர் உட்பட இருவர் கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கண்டிக்கிளையில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க வரும் இளைஞர் யுவதிகளிடம் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையினூடாக பெற்றுத் தருவதாக கூறி 6000 தொடக்கம் 50,000 ரூபா வரை பணம் பெற்ற நபருடன் மேலும் இரு நபர்களை இளைஞர் பிடித்து கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஒருநாள் சேவையினூடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் தினமும் கண்டிக்கிளையில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அவ்விண்ணப்பங்களை அலுவலகத்தில் பெற்று விற்பனை செய்துள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
ஒரு நாள் சேவையினூடாக கடவுச்சீட்டுக்களை செய்து கொடுக்க 40,000 தொடக்கம் 50,000 ரூபா வரையிலும் சாதாரண சேவையினூடாக கடவுச்சீட்டுக்களை செய்து கொடுக்க 6000 ரூபாவும் அறவிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒருநாள் சேவையினூடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொடுப்பதற்கு தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் இருந்து வருகைத் தந்த யுவதியொருவரிடம் முற்பணமாக 25,000 ரூபாவை குறித்த நபர் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் கடவுச்சீட்டை பெற வந்திருந்த சில இளைஞர்கள் குறித்த சந்தேகநபர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் குடிவரவு குடிகல்வு திணைக்களத்தில் முன்பு பணியாற்றியதாக கூறப்படும் ஒருவரும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரும் மாத்தளைப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தெஹியத்தகண்டிய பிரதேசத்தை சேர்ந்த பெண் வழங்கிய 25,000 பணத்தை குறித்த இளைஞர்கள் அந்த பெண்ணிடமே திருப்பிக் கொடுத்துள்ளனர். அத்துடன் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விடாமல் திணைக்கள பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் முயன்றமைக்கு அங்கிருந்து இளைஞர்கள் கடும் எதிர்ப்பை வௌியிட்டதுடன் சந்தேகநபர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.