மக்கள் பலம் என்ன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வெளியேறவேண்டும் என்ற விடையத்தை நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம், தொடர்ச்சியான பாரிய போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். அந்த போராட்டங்கள் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் பலம் என்ன என்பது இன்றைய தினம் இலங்கைக்கும் உலகத்திற்கும் எடுத்துக் காட்டப்பட்டு இருக்கின்றது.
இடைக்கால அரசாங்கம் வெற்றிபெற நிர்வாக சேவை சங்கத்தின் 12 யோசனைகள்
இன்றைய இந்த மக்கள் போராட்டத்தை முடக்குவதற்காக கடந்த காலத்தில் பொலிஸ் மா அதிபர் மிகத்தெளிவாக பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். இன்றைய தினம் ஏதேனும் ஒரு வகையில் வன்முறை சம்பவங்கள் ஏற்படக்கூடும் அதனால் அவதானமாக இருக்குமாறு கூறியிருந்தார். நேற்றைய தினம் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பஸ், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இவ்வாறு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தனர். ஆனால் இலட்சக்கணக்கான மக்கள் கொழும்புக்கு வந்து மக்கள் பலம் என்ன என்பதை நிரூபித்துக் காட்டினார்.
இந்த மக்கள் பலம் என்ன என்பதை தெரிந்துகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை இடம்பெறவேண்டும் என தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில் நாங்கள் கூறுகின்றோம்.
கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறவேண்டும், அதேபோன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தனது பதவியை கைவிட்டுச் செல்ல வேண்டும். இப்போது வரையில் இந்த நாட்டு மக்கள் அனுபவித்த துன்பங்கள் போதும். நாட்டில் கல்வி இல்லை. கல்வி முழுமையாக முடங்கியுள்ளது. வரிசைகளில் மக்கள் மரணித்தனர். அனைத்து மக்களும் பதிலளிக்கும் வகையில் முன்னோக்கி வந்தனர். அவ்வாறு வந்த மக்கள் தான் இந்த போராட்டத்தை செய்திருக்கின்றனர். இது படிப்படியாக வந்த பயணமாகும்.
மே மாதம் 9ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச வெளியேறினார். ஜூன் மாதம் 9ஆம் திகதி பெசில் ராஜபக்ஷ சென்றார். இன்று கோட்டபாய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க போக வேண்டி இருக்கின்றது. அவர்கள் தற்போது வரையும் அதிகாரத்தில் இருக்கின்றனர். இன்னும் செல்லவில்லை. எனவே அவர்கள் போக வேண்டுமென தொழிலாளர் வர்க்கம் என்ற அடிப்படையில் நாங்கள் கூறுகின்றோம்.
அவ்வாறு போகாவிட்டால் அடுத்த திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளக் கூடிய அனைத்து தொழிற்சங்க நடவடிக்கையையும் தொழிலாளர் வர்க்கம் என்ற அடிப்படையில் நாங்கள் முன்னெடுப்போம். இந்தப் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்பதை நாங்கள் மக்களுக்கு கூறுகின்றோம்.
கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் அதிகாரத்திலிருந்து வெளியேறினால் மாத்திரமே இந்த போராட்டம் முடிவடையும். அவ்வாறு இல்லாவிட்டால் அது முடிவடையாது. ஜனாதிபதி மாளிகையை விட்டுச் சென்றனர் அலரி மாளிகையை விட்டு சென்றனர் என்பதனால் இந்த போராட்டம் முடிவடையாது. அதனை விட்டுச் செல்வதற்கு இந்த மக்களே ஆளாக்கின்றனர். மக்கள் பலம் என்ன என்பதை வெளிக்காட்டி இருக்கின்றார்கள்.
இன்றைய தினம் முப்படையினரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் மக்கள் பலம் அதனை விடவும் பெரிது என்பதை காட்டி இருந்தனர். எனவே அவர்கள் போகாவிட்டால் நாங்கள் எமது போராட்டத்தைே தொழிலாளர் வர்க்கம் என்ற அடிப்படையில் மக்களுடன் நாம் முன்னெடுப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.