உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பான கோரிக்கைக்கு கல்வி அமைச்சர் இணக்கம்
உதவி ஆசிரியர்களுக்கான நியமனத்தை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன உறுதியளித்துள்ளார்.
இறக்குவானை சென். ஜோன்ஸ் பாடசாலை தேசியப் பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமைக்கான ஆவணம் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தலைமையில் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய செந்தில் தொண்டமான், 2014ஆம் ஆண்டு மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அப்போதைய கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் கூட்டு அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக 3,000க்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர் நியமன பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி பெற்றிருந்தனர்.
கடந்த காலத்தில் இவர்கள் பகுதிப்பகுதியாக உதவி ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்பட்டனர். எனினும் ஆசிரியர் சேவைக்கான தரத்தை பூர்த்தி செய்துள்ள பலருக்கு இன்னமும் நியமனம் வழங்கப்படாதுள்ளது.
அதனை வழங்குவதன் மூலம் வினைதிறனான சேவை பாடசாலைகளுக்கு பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை இவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சரிடம் பகிரங்க கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, உரையாற்றிய கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, குறித்த கோரிக்கை குறித்து எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடி விரைவாக உதவி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கையெடுக்கப்படுமெனவும், 5000 ரூபா கொடுப்பனவில் உதவி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான இயலுமை குறித்து ஆராய்வதாகவும் கல்வி அமைச்சர் உறுதியளித்தார்.
மூலம் - சூரியன் செய்திகள்