தனியார்துறை ஊழியர்களின் சமூக பாதுகாப்புக்கு உலக வங்கியின் உதவி அவசியம்
தனியார்துறையில் பணியாற்றும் முறைசார் மற்றும் முறைசாரா பிரிவுகளில் பணியாற்றுபவர்களுடைய சமூக நலனோன்புகயைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கான சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டமொன்றை வகுப்பது காலத்தின் கட்டாயம் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே தனியார் துறைசார் முறைசார் மற்றும் முறைசாரா துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக உலக வங்கியின் உதவியை பெற்றுத் தருமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலக வங்கி பிரதிநிதிகளுடனான நேற்றைய (20) கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்யைில் உள்ள இளைஞர் யுவதிகள் இணைந்து பணியாற்றக்கூடிய பல தொழிற்றுறைகள் இருப்பினும் அவர்கள் அவ்வாறு பணியாற்ற விரும்புவதில்லை என்றும் அரச தொழிலையே எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
அரசதுறையில் பலமான ஓய்வூதிய திட்டம் காணப்படுகிறது. எனினும் தனியார்துறையில் ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் சேமலாப நிதியம் தவிர்ந்த வேறு நன்மைகள் இன்மையே இதற்குக் காரணம். கொவிட் தொற்று போன்ற அசாதாரண சூழ்நிலைகளின் போது அவர்களைப் பாதுகாக்கக்கூடிய வசதிகள் ஊழியர் நம்பிக்கை மற்றும் சேமலாப நிதியத்தில் இல்லாமை பெறும் குறைப்பாடாகும். அதனை நிவர்த்தி செய்வது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனூடாக தனியார் துறையில் முறைசார் மற்றும் முறைசாரா துறைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெற்றுக்கொடுப்பதனூடாக பலம்மிக்க சமூக பாதுகாப்பினை ஏற்படுத்திக்கொடுப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே சர்வதேச தொழில் தாபனத்துடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உலக வங்கியின் ஒத்துழைப்பை பெற்றுத்தருவது அவசியம் என்றும் உலக வங்கி பிரதிநிதிகளிடம் தொழில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த உலக வங்கியின் பிரதிநிதிகள், ஏற்கனவே அபிவிருத்தியடைந்த பல நாடுகள் ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு முறையொன்றினை நடைமுறைப்படுத்தியுள்ளன. இலங்கைக்கு மிக அண்மையான நாடுகளில் ஒன்றான மாலைதீவிலும் அவ்வாறான முறையொன்று அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினர்.