புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கோரிய ஜனாதிபதி

புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கோரிய ஜனாதிபதி

ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கையர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறு ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட்டிடம் (டுழசன வுயசஙை யுhஅயன) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய அமைச்சர் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்,

தெற்காசியா, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய அமைப்புக்கான இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் -
இந்து சமுத்திரப் பிராந்தியம், மத்திய ஆசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கிடையிலான ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதற்கான பல்வேறு துறைகள் சார்ந்த பொறுப்புகள், லோர்ட் தாரிக் அஹமட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுத் துறையின் இலக்குகளை அடைவதற்கும் தொழில்நுட்பம்சார் தடைகளை வெற்றிகொள்வதற்கும் உதவுமாறும் அவரிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த லோர்ட் அஹமட், தமது நாட்டுக்குச் சென்றவுடன் இந்த விடயம் பற்றி கூடிய விரைவில் ஆராய்ந்து, அது தொடர்பான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.

இலங்கைக்கான முதலீட்டு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய இராச்சியத்தில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளனர் என்பதையும் தெரிவித்தார்.

இலங்கையின் சுகாதார ஊழியர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அத்தோடு, பொருளாதாரத் துறைக்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும், அமைச்சர் லோர்ட் உறுதியளித்தார்.
'இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதற்கு, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்து செயற்பட தாம் விருப்புவதாக பிரித்தானிய அமைச்சரிடம் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பத்தை வழங்குமாறும் லோர்ட் தாரிக் அஹமட்டிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்கையில் - இலங்கையின் நெருங்கிய மற்றும் நடைமுறை நண்பராக ஒத்துழைக்க, ஐக்கிய இராச்சியம் எப்போதும் தயாராக இருப்பதாக அவர் ஜனாதிபதியிடம் கூறினார்.

ஐக்கிய இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2023இல் 75 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இதற்காக ஒரு விழாவை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதில், இரு நாடுகளின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image