அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கப்போவதில்லை
நாளை (21) பாடசாலை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் பாடசாலைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளபோதிலும் அதிபர்கள் இல்லாமல் பாடசாலைக்கு சமூகமளிக்கப்போவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 21ம் திகதி மாத்திரமல்ல, அதற்குப் பின்னரும் அதிபர்கள் இல்லாமல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கமாட்டார்கள். எனினும் பாடசாலைக்குள் உள்வாங்கியுள்ள பயிலுநர் பட்டதாரிகள் கட்டாயம் சமூகமளிக்குமாறு அறிவுறுத்திள்ள நிலையில் அவர்கள் மாத்திரம் பாடசாலைகளுக்கு சமூகமளிக்குமாறு அச்சங்கத்தின் சந்தன சூரியராய்ச்சி தெரிவித்துள்ளார்,
மேலும், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் இம்மாதம் 21ம் மற்றும் 22ம் திகதிகளில் பாடசாலைக்கு சமூமளிப்பதில்லையென்று தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் பாடசாலை ஆரம்பிப்பதற்கான ஆயத்தப் பணிகளை ஆரம்பிக்குமாறும் கற்பித்தல் பணிகளை முன்னெடுக்குமாறும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாடசாலையை ஆரம்பிப்பது அதிபர்களின் கடமை. கற்பிப்பது ஆசிரியர்களின் கடமை. எனவே நாம் அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலைக்கு சமூகமளிப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.