நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் (Passport) எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 500 ஆல் அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் ஒரு நாள் சேவையின் கீழ் சேவை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரமாக காணப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், ஒரு நாள் சேவையின் கீழான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,500 ஐ கடந்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய, கொழும்பிலுள்ள பிரதான காரியாலயத்தில் கடந்த 10 நாட்களுக்குள் ஒரு நாள் சேவையை 12,158 பேர் பெற்றுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் சாதாரண சேவையின் கீழ் 11,242 பேர் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக மாத்தறை, கண்டி, வவுனியா மற்றும் குருணாகல் ஆகிய பகுதிகளிலுள்ள பிராந்திய அலுவலகங்களில் கடந்த 10 நாட்களுக்குள் 10,145 பேர் சேவையை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மூலம் - நியூஸ்பெஸ்ட்