வலய காரியாலயங்கள் முன்பாக போராட தயாராகும் அதிபர் ஆசிரியர்கள்
ஆசிரியர் தினமான நாளை (06) வலயக் கல்வி காரியாலயங்களுக்கு முன்பாக போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதிபர் ஆசிரியர்களின் வேதனப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதுடன் மாணவர்களின் கல்வியுரிமையை பாதுகாக்குமாறும் கோரி இப்போராட்டத்தை நடத்த அதிபர் ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதேவேளை, அதிபர் ஆசிரியர்களின்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படாது இன்னும் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் வடக்கு கிழக்கு மாகாண ஆசிரியர்கள் ஒன்லைன் கற்பித்தலை முழுமையாக ஆரம்பித்துள்ளனர் என்ற பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கரவின் கருத்தினை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வட மாகாண செயலாளர் பொன்னுத்துறை காண்டீபன் மறுத்துள்ளார்.
அமைச்சரின் இக்கருத்தின் மூலம் இனவாதத்தை தூண்டி மக்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. உண்மையில் வடமாகாண ஆசிரியர்கள் தங்களது பூரண ஒத்துழைப்பை போராட்டத்திற்கு வழங்குகின்றனர். எதிர்வரும் 6ஆம் திகதி ஆசிரியர் தினத்தன்று சகல கோட்ட மட்டத்திலும் ஆசிரியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வடமாகாண ஆளுநரால் பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இவை தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை எந்த செய்திகளையும், கடிதங்களையும் நம்ப வேண்டாம். கடந்த காலத்தில் ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காத வடமாகாண ஆளுநர் பாடசாலை ஆரம்பிக்கும் விடயத்தில் மட்டும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும் என்றும் இவ்வூடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் மாவட்ட பிரதிநிதி பரமசிவம் கஜமுகன் உட்பட சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.