இனி நடைமுறைக்கு வரும் சுகாதார வழிகாட்டல்!

இனி நடைமுறைக்கு வரும் சுகாதார வழிகாட்டல்!

அதிகாலை 4 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ள நிலையில், சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வருமாறு...

இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் இந்த சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலும், 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலும் இரண்டு கட்டங்களாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களுக்கும் நாளாந்தம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரையில் அனுமதி வழங்கப்பட மாட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள் அறிவித்தல்வரை எந்தவொரு பொது மக்கள் ஒன்று கூடலுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

பொது போக்குவரத்தின் போது ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

பொது போக்குவரத்தில் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட கூடாது என்பதுடன் வாகனங்களின் ஜன்னல்கள் திறக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

வீடு மற்றும் தங்குமிடங்களில் இருந்து தொழில், சுகாதார சேவை, அத்தியாவசிய, பொருட்கள் கொள்வனவு என்பவற்றுக்கு நபர்கள் வெளியே செல்லலாம்.


கூட்டங்கள், செயலமர்வுகள் இணையவழி முறைமையில் மேற்கொள்வதற்கு ஊக்குவிப்பதோடு, நாளை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் 25 சதவீதமானோரின் பங்கேற்புடன் அதிகபட்சமாக 25 பேருடன் அவற்றை நடத்த முடியும்.

நிகழ்வுகள், விருந்துபசாரங்கள், வீடுகளில் இடம்பெறும் சிறு விருந்துகளுக்கு அனுமதி இல்லை.

பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக அனுமதிக்கப்படுவதுடன், பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் அவை இயங்க வேண்டும்.

திறந்த சந்தைகள் மற்றும் வாராந்த சந்தைகள் என்பனவும் பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் இயங்க வேண்டும்.

உணவகங்களில் உணவு விநியோகத்திற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடமாடும் வர்த்தகங்கள் பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் இயங்க வேண்டும்.

வர்த்தக நிலையங்கள், சில்லறை வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், சிறப்பு அங்காடிகள் மற்றும் வீட்டுப் பொருள் விற்பனை நிலையங்கள் என்பனவற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் மொத்த கொள்ளளவில் 10 சதவீதமானோருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

குறித்த இடங்களில் அனுமதிக்கூடிய நபர்களின் எண்ணிக்கை வெளியே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

வங்கிகள், நிதிநிறுவனங்கள்ஈ அடகு பிடிப்பு நிலையங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் 5 பேரை மாத்திரம் அனுமதிக்க முடியும் என்பதுடன் ஏனையோர் குறித்த இடங்களுக்கு வெளியே சமூக இடைவெளியை பேணிவாறு வரிசையில் நிற்க முடியும்.

கட்டுமாண தளங்களின் பணிகளை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்க முடியும்.
விவசாய நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது,

சிகையலங்கார நிலையம், அழகுக்கலை நிலையங்களை முன்பதிவுடன் இயக்க முடியும்.

பாடசாலைகளை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு அமைய 200க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை முதற்கட்டமாக திறக்க முடியும்.

முன்பள்ளிகளை மொத்த மாணவர்களின் கொள்ளளவில் 50 சதவீதமானோருடன் இயக்க முடியும்.

பகல்நேர குழந்தைகள் பராமரிப்பகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் மூடப்பட்டிருத்தல் வேண்டும்.

உடற்பயிற்சி நிலையங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 5 மாத்திரமே இருக்க முடியும் என்பதுடன் அருகருகே இருக்கின்ற உபகரணங்களை ஒரு தடவையில் பயன்படுத்த அனுமதி இல்லை.

விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை.

நாளை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் 10 பேரின் பங்குபற்றுதலுடன் பதிவுத் திருமணங்களை நடத்த முடியும்.

16ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரையில் ஒரு சந்தர்ப்பத்தில் 25 சதவீதமானோரின் பங்குபற்றுதலுடன் திருமணங்களை நடத்த முடியும் என்பதோடு, அதிகபட்சமாக 50 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் ஒரு சந்தர்ப்பத்தில் 10 பேரின் பங்குபற்றுதலுடன் மரண சடங்குகள் 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதியின் பின்னர் மரண சடங்குகளில் ஒரு சந்தர்ப்பத்தில் 15 பேர் மாத்திரம் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தளங்களில் ஒன்றிணைந்த செயற்பாடுகள் மற்றும் கூட்டங்கள் என்பவற்றை நடத்துவதற்கு அனுமதியில்லை.

கண்காட்சி மற்றும் பெரும் கூட்டங்களை நடத்த அனுமதியில்லை.

செயன்முறை பரீட்சைகள் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெற வேண்டும்.

மேலதிக வகுப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை நடவடிக்கைகளை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுத்து செல்ல முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image