அசேதனப் பசளை இறக்குமதித் தடையினால் தோட்டத் தொழிலாளருக்கு சம்பளம் குறையும்!
தற்போது நாட்டில் உள்ள அசேதன பசளை இறக்குமதி தடையானது, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களினது வருமானத்திற்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் என்று முதலாளிமார் சம்மேளத்தின் ஊடகப் பேச்சாளரும் ஹேலிஸ் பெருந்தோட்ட யாக்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதமாகும் போது தோட்டத் தொழிலாளர்கள் குறைவான பயிர் வளர்ச்சி காரணமாக அவர்களுடைய வருமானத்தில் 25 - 30 வீதம் வருமானத்தை இழப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் அசேதன பசளை இறக்குமதியின்மையினால் களைக்கொல்லி மற்றும் பூஞ்சைக் கொல்லிகள் இல்லாமல் பயிர்களின் உற்பத்தித்திறன் குறையும் அதே விகிதத்தில் தொழிலாளர்களும் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்று ரொஷான் ராஜதுரை பிஸ்னஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
தற்போது தோட்டத் தொழிலாளர்கள் மாதம் 25 நாட்கள் பணியாற்றுகின்றனர். சிலர் ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் பணியாற்றுகின்றனர். தொடர்ந்து அசேதன பசளை மற்றும் களைக்கொல்லி தடை நீடிக்கப்படுமாக இருந்தால் உற்பத்தி பாதிக்கப்படும்.
தேயிலை ஆராய்ச்சி நிலையத்தினால் பரிந்துரை செய்யப்படும் பசளை பாவனை வழிகாட்டல்களை மாத்திரமே பின்பற்ற முடியும்.
தோட்டங்களில் களையெடுத்தல் போன்ற பணிகளுக்கு தொழிலாளர்களை அனுமதிக்குமளவுக்கு தேயிலை விற்பனையில் கிடைக்கும் பணம் போதவில்லை. எனவே அப்பணிக்கு தொழிலாளர்களை அமர்த்த முடியாது.
இலங்கையில் கிளைபோசேட் தடைக்கு முன்னர் ஆண்டுதோறும் குறைந்தது 7.5 மில்லியன் கிலோ இலங்கை தேயிலை ஜப்பானுக்கு ஏற்றுமதியாகியது. தற்போது அது 5 மில்லியனாக குறைவடைந்துள்ளது.
சந்தை வாய்ப்பு குறைதல், நம்பிக்கையை கட்டியெழுப்புதல் போன்றவற்றை இதனூடான தௌிவாகிறது.. இவ்வாறு இடம்பெறும்போது தொழிலாளர்களின் வருமானமும் குறைவடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிஸ்னஸ் டைம்ஸ்