ஆட்கடத்தலை முறியடிக்க இலங்கையின் முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா பாராட்டு
சட்டவிரோத ஆட்கடத்தலை முறியடிக்க கடற்படையினர் மேற்கொண்ட முயற்சிகள் அவுஸ்திரேலிய தூதுக்குழுவினரால் பாராட்டப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய பதில் உயர்ஸ்தானிகர் அமன்டா ஜுவல் தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக்குழு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) கடந்த 23 ஆம் திகதி சந்தித்தது.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சிற்கு வருகை தந்த அவுஸ்திரேலிய குழுவுக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சந்திப்பின்போது பிராந்திய பாதுகாப்பின் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் உட்பட இருதரப்பு முக்கியத்துவம் விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பதில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருகிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
பாரம்பரியமற்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவம் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது. இந்த விடயங்கள் தொடர்பில் அனைத்து பிராந்திய நாடுகளுடனும் இலங்கை முழுமையாக ஒத்துழைக்கும் என பாதுகாப்பு செயலாளர் உறுதியளிதார்.
நடுநிலையான நாடு என்ற வகையில் நாம் பிராந்தியத்தின் நலனுக்காக மிதமான வகிபாகத்தை வகிக்கின்ற அதேவேளை, எமது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை சுரண்டுவோ, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவோ இலங்கை நிலப்பரப்பை ஒரு தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என அவர் வலியுறுத்தினார்.
பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகள் மூலம் கிடைக்கப்பெறும் பலாபலன்கள் குறித்தும் பாதுகாப்பு செயலாளர் இதன்போது விளக்கமளித்தார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முடக்குவதற்கு நாட்டின் கடற்படை மற்றும் ஏனைய சட்ட அமுலாக்க பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அவுஸ்திரேலிய பதில் உயர்ஸ்தானிகர் இந்த சந்திப்பின்போது பாராட்டினார்.
தீவிரவாதத்தை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தலை முறியடிக்க கடற்படையினர் மேற்கொண்ட முயற்சிகள் என்பனவும் அவுஸ்திரேலிய தூதுக்குழுவினரால் பாராட்டப்பட்டது.
இரு நாடுகளுக்கிடையில் நிலவும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக இரு தரப்பினரும் இந்த சந்திப்பின்போது உறுதியளித்தனர்.
கொவிட் -19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற இந்த சந்திப்பில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அயன் கெய்ன் மற்றும் ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை அதிகாரி பிரட் செஹெண்டர் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.