ஆசிரியர் சேவையில் இணைக்க வயதெல்லை வேண்டாம்!

ஆசிரியர் சேவையில் இணைக்க வயதெல்லை வேண்டாம்!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் MN-04 சம்பள தரத்திலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான தகமையில் வயதெல்லையை குறிப்பிட வேண்டாம் என்று கல்வியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியாராச்சியின் கையெழுத்துடன் கல்வியமைச்சின் செயலாளருக்கு நேற்று (10) இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த மார்ச் மாதம் 3ம் திகதி அமைச்சின் செயலாளர் என்ற வகையில் நீங்கள் உட்பட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் MN-04 சம்பள தரத்தில் பணியாற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவை விதிமுறைகளுக்கமைய சேவையில் இணைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, இணக்கப்பாடு எட்டப்பட்டதுடன் பின்னர் கடிதம் மூலமாகவும் தெரியப்படுத்தினோம் என்பதை முதலில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மேற்படி விடயத்துக்கமைய, பொது சேவைகள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுக்கு பின்னர் வர்த்தமானி அறிவித்தல் வௌியிட தயாராகி வருவதாகவும் அவ்வர்த்தமானி அறிவித்தலுக்கமைய விண்ணப்பிப்பதற்கான ஆகக்கூடிய வயதெல்லை 45 என்றும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு வகைப்படுத்தப்படுமாயின் பாடசாலைகளில் பணியாற்றும் பட்டதாரிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாகவும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதற்கமைய, குறித்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தற்போது பொது சேவையில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் என்றவகையில் அரசின் ஏனைய மூடிய பரீட்சையில் வயதெல்லை கவனத்திற்கொள்ளப்படாதது என்ற நிபந்தனையை வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கி அனைவருக்கும் நியாயமான வாய்ப்பை வழங்குமாறு வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இக்கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கான நேரம், திகதியை ஒதுக்கித் தருமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts