அத்தியாவசிய சேவைக்கு அழைக்கப்படும் அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு தற்போது விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அத்தியாவசிய தேவைக்காக அழைக்கப்படும் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பது ஒன்றிணைந்து அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையத்தின் கோரிக்கையாக இருந்தது.
எனினும் பொதுப் போக்குவரத்து இல்லாமை உள்ளிட்ட பல விடயங்களின் காரணமாக சேவைக்கு சமூகமளிக்கும் அனைத்து உத்தியோகத்தர்களும் மேலதிக செலவை தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 2020 மற்றும் 2021 இல் ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர்கள், 20,000 ரூபாய் என்ற மிகக்குறைந்த மாதாந்த கொடுப்பனவை மாத்திரம் கொண்டு தற்போது அனைத்து சேவைகளுக்கும் சமூகமளிக்கின்றனர். இந்த நிலைமைக்கு மத்தியில் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்குமாறு கோருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.