தொழிற்சங்க சந்தா போட்டியினால் எங்களை பலிகடாவாக்காதீர்கள்- தோட்டத் தொழிலாளர்

தொழிற்சங்க சந்தா போட்டியினால் எங்களை பலிகடாவாக்காதீர்கள்- தோட்டத் தொழிலாளர்

ஜூன் மாதம் என்பது பெருந்தோட்டங்களில் தொழிற்சங்களுக்கான புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் மாதமாகும. இந்த மாதத்தில் தொழிலாளர்கள் தாங்கள் அங்கம் வகிக்கின்ற தொழிற் சங்கங்களில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது புதிய தொழிற்சங்கத்தில் இணைந்து கொள்வதா? என்பது தொடர்பாக தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து அங்கத்துவ படிவத்தை முகாமைக்கு கையளிக்கின்ற மாதமாகும்.

எனினும் இந்த வருடம் இந்த புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வழமையான செயற்பாட்டை தற்பொழுது மேற்கொள்ள வேண்டாம் என தொழிலாளர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

அங்கத்தவர்கள் இணைப்பின் பொழுது தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள், தொழிற்சங்கத்தை பிரிதிநிதித்துவம் செய்கின்ற காரியாலய உத்தியோகஸ்தர்கள், தோட்டத் தலைவர்கள் மாவட்டத் தலைவர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் எமது பெருந்தோட்ட பகுதிகளுக்கு வருகை தந்து தங்களுடைய தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்கான பல்வேறு ஏற்பாடுகளை முன்னெடுப்பார்கள்.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று பரவலானது பெருந்தோட்ட பகுதிகளிலும் மிகவும் விரைவாக பரவி வருகின்ற நிலையில் இவர்களின் தொழிற்சங்க சந்தா போட்டியின் காரணமாக கொரோனா தொற்றானது பெருந்தோட்ட பகுதிகளில் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்த தொழிற்சங்க அங்கத்தவர்களை இணைத்துக் கொள்கின்ற காலப் பகுதியில் கூட்டம் கூட்டமாக செயற்படுகின்ற ஒரு நிலைமை ஏற்படும். வாகனங்கள் அதிகமாக பெருந்தோட்ட பகுதிகளுக்கு சென்று வரும்.

இன்று பல பெருந்தோட்ட பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த முடக்கத்தை மீறி தங்களுடைய பலத்தை பயன்படுத்தி செயற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தாமும் வெளியில் செல்வது மற்றும் அயலவர்களை சந்திப்பதை தவிர்த்து வரும் நிலையில் இந்த தொழிற்சங்க செயற்பாடானது தம்மை மேலும் சிரமத்திற்கு உட்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது தொழிலாளர்கள் எந்த தொழிற்சங்கத்தில் அங்கத்தவராக இருக்கின்றார்களோ அதே தொழிற்சங்கத்தில் தொடர்ந்து இணைந்திருப்பதுடன் அடுத்து வருகின்ற புதிய தொழிற்சங்க இணைவின் பொழுது, அதாவது டிசம்பர் மாதத்தில் வருகின்ற தொழிற்சங்க அங்கத்தவர்கள் இணைவில் இதில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் தொழிலாளர்கள் அதனை செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்விடயம் தொடர்பாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, சுகாதார அமைச்சு, பெருந்தோட்ட கம்பனிகள் கொரோனா தொற்று தடுப்பு நிலையம் ஆகியன இணைந்து ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளவதுடன் இதற்கான ஒத்துழைப்பை தொழிற்சங்கங்களும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

தற்பொழுது இந்த கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் பயணத் தடையையும் மீறி ஒரு சில தொழிற்சங்கங்கள் தங்களுடைய தொழிற்சங்கத்திற்கு தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்காக கொரோனா நிவாரணம் வழங்குவதாக கூறிக் கொண்டு பெருந்தோட்டங்களுக்குள் செயற்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

இதன் மூலம் தொற்று அதிகரிப்பதற்கான நிலைமை ஏற்படும். எனவே தொழிற்சங்க போட்டியில் தொழிலார்களை பகடைக்காயாக பயன்படுத்துவதை தொழிற்சங்கங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தொழிலார்கள் தமது கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image