பெருந்தொற்றினால் வேலையிழந்த வீட்டுப்பணிப்பெண்களுக்கு உதவுமா அரசு?
கொவிட் 19 தொற்றினால் வீட்டுப்பணிப்பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தௌிவுபடுத்தும் நிகழ்வொன்று நேற்று முன்தினம் (27) கொழும்பில் நடைபெற்றது.
ப்ரொடெக் தொழிற்சங்கத்தின் கொழும்பு கிளை ஏற்பாட்டில் இத்தௌிவுபடுத்தும் நிகழ்வு ஆரம்பமானது.
ஏற்கனவே சேவை ஒப்பந்தம், உரிமைகளற்ற நிலையில் தினமும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்த வீட்டுப்பணிப்பெண்கள் தற்போது இன்னும் அதிகரித்துள்ளது என்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலானரகள் நாளாந்த சம்பளத்திற்கு பணியாற்றுகின்றவர்கள். பல மாதங்களாக பணிக்கு செல்ல முடியாமல் தற்போது பல்வேறு பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். தம்மிடமிருந்த சொற்ப தங்க நகைகளையும் விற்றுதான் கடந்த கொரோனா தொற்று சமயம் தமது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் எவ்வித அனுசரணையுமில்லாமல் இம்முறை துன்புறுகின்றனர். அரசாங்கம் கூறும் 10,000 சலுகைப் பொதி தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வௌியேறியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. புதுவருடம் சமுர்தி பயனாளிகளுக்கும் காத்திருப்புப் பட்டியலில் இருந்தவர்களுக்கும் மாத்திரமே 5000 ரூபா வழங்கப்பட்டது. எனினும் இந்த சூழ்நிலையில் வறுமையின் காரணமாக மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழும் பலருக்கு இந்த உதவித்தொகை கிடைக்கவில்லை.
மேலும் பயணத்தடை நீக்கப்பட்டாலும் அவர்களுக்கு வௌியில் செல்வதற்கும் இராணுவதளபதி கூறியது போன்று உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் அவசியமான பணம் இல்லையென்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனால் ஏனையோர் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தைக்கு செல்லும் போது தாம் இவ்வாறு பதாகைகளை பிடித்து ஜனாதிபதியிடம் உதவித்தொகையை வழங்குமாறு கோருவதாக இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கிராம சேவகர் மட்டத்தில் தொழில் இழந்த முறைசாரா தொழிலாளர்களின் தகவல் சேகரித்து அவர்களுக்கான சலுகையை பெற்றுத்தருமாறும் இவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்னர்.
மேலும் பல வருடங்களாக வீட்டுப்பணிப்பெண்களுக்கான தொழில் உரிமைகளை வலுப்படுத்தி உரிய வேலைவாய்ப்பு விதிமுறைகளை குறிப்பிடும் ஒரு சட்டக் கட்டமைப்பை உருவாக்குமாறு கோரி வருகிறபோதிலும் இதுவரை அதற்கான கலந்துரையாடல்களுக்கான வாய்ப்பினை அதிகாரிகள் வழங்கவில்லை. மேலும் அதற்கான கலந்துரையாடல் ஒன்றுக்கான சந்தர்ப்பம் வழங்குவதான சில மாதங்களுக்கு முன்னர் உறுதியளித்த போதிலும் அவ்வுறுதி மொழி தேர்தல் கால வாக்குறுதி போன்றதாகியுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வெகுவிரைவில் தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பு வழங்குமாறு தொழில் அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் கோரிக்கை விடுப்பதுடன் இந்த பெருந்தொற்று காலப்பகுதியில் தாம் வாக்களித்து தெரிவு செய்த ஜனாதிபதி தமக்கு உதவி வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.