அஸ்ட்ராசெனகா இரண்டாம் தடுப்பூசி பெறவிருப்போர் கவனத்திற்கு

அஸ்ட்ராசெனகா இரண்டாம் தடுப்பூசி பெறவிருப்போர் கவனத்திற்கு

மே மாதம் முதலாம் திகதியின் பின்னர், அஸ்ட்ராசெனகா இரண்டாம் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ரா-செனகா தடுப்பூசிக்கு பதிலாக சீனாவில் தயாரிக்கப்படும் சினோபாம் தடுப்பூசியை செலுத்துவதற்கு தயார்படுத்தல் உள்ளதா? என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

அஸ்ட்ரா-செனகா இரண்டாம் தடுப்பூசி செலுத்துகை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக முன்னர் கூறப்பட்டது. எனினும், மே மாதம் முதல் வாரத்தில் அதனை செலுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

12 வாரங்களுக்கு முன்னதாக இரண்டாம் தடுப்பூசி செலுத்தவேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 12 வாரங்கள் நிறைவடைந்துள்ளன. இதன் உண்மை நிலை என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, ஜனவரி மாதம் 29ஆம் திகதி அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில், நான்கு வாரங்களில் இரண்டாம் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எனினும் புதிய விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில், 12 வாரங்களின் பின்னர் இரண்டாம் தடுப்பூசியை செலுத்தினால் பாதுகப்புத்தன்மை 95 சதவீதம் வரையில் இருக்கும் என கண்றியப்பட்டது.

இதற்கமைய ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி தான் இரண்டாம் தடுப்பு செலுத்த வேண்டியுள்ளது. எனவே மே மாதம் முதலாம் திகதி என்பது பிரச்சினை அல்ல. மே மாதம் முதலாம் திகதியின் பின்னர் இரண்டாம் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

இதேவேளை, அஸ்ட்ராசெனகா இரண்டாம் தடுப்பூசி செலுத்த முடியாத சந்தர்ப்பத்தில், சினோபாம் தடுப்பூசியையா செலுத்தப் போகிறீர்கள்? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே, அஸ்டார்செனகா முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டால், இரண்டாம் தடுப்பூசியும் அதனையே செலுத்தவேண்டும் என தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதில் மாற்றம் ஏற்படவில்லை. எனினும், எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படுமா என்பது தமக்குத் தெரியாது என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image