பட்டதாரி பயிலுநர்களை சேவையில் இணைப்பதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் நாளை (01) அவர்களுக்குரிய பிரதேச செயலகங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோரப்பட்டுள்ள பட்டதாரி சான்றிதழ் மற்றும் உறுதிபடுத்தல் சான்றிதழ்களுக்கு மேலதிகமாக அரச நிர்வாக அமைச்சு கோரியுள்ள சத்திய கடிதம் மற்றும் பிரிவு 4 இற்கு உரிய விண்ணப்பம் என்பவற்றை கவனத்திற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் ஆகியன சுட்டிக்காட்டியுள்ளன.
சத்திய கடிதத்தில் கோரப்படுவது அரச துறையில் நிரந்தர நியமனம் அதாவது ஓய்வூதியத்துடன் கூடிய நியமனம் இன்மை மற்றும் தனியார் துறையில் 50,000 ரூபாவுக்கும் அதிகமான நிர்வாக மட்ட பதவிகளை வகிக்கவில்லை என்பதாகும். இவ்விடயம் தொடர்பில் நாம் குறித்த அமைச்சுடன், அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி பெற்றுக்கொண்ட விளக்கம் இதுவே.
எனவே தனியார் துறைகளில் வேறு பதவிகளில் இருந்தவர்கள் யோசிக்கத் தேவையில்லை. எந்த அச்சமும் சந்தேகமும் இன்றி உள்வாங்கப்படுவார்கள். குறிப்பாக தனியார் துறையில் குறிப்பிட்ட சம்பள மட்டங்களில் பணியாற்றிவர்கள் மட்டுமே நிராகரிக்கப்படுவார்கள். ஏனையோர் வாய்ப்பினை பெறுவர் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்கு முன்னர் விண்ணப்பித்து அரசின் வகைப்படுத்தலினூடாக நிராகரிக்கப்பட்ட தகமையுடைய பட்டதாரிகளின் பெயர்களும் அடுத்தடுத்து அமைச்சு வௌியிடப்பட்ட பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட பெயர் பட்டியலில் இடம்பெறாத, ஏற்கனவே பெயர் இடம்பெற்ற பட்டதாரிகளைப் போன்றே தகமைப் பெற்ற பட்டதாரிகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம். கடந்த ஜனவரி மாதம் ஒன்றிணைந்த சேவை ஆணையாளர் நாயகம் மற்றும் அச்சேவையின் பணிப்பாளரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். அவ்வாறு வாய்ப்பிழந்தவர்களின் தகவல்களை பெற்றுத்தருமாறு அக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டமைக்கமைய தற்போது விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கும் வாய்ப்பு பெப்ரவரி முதலாம் திகதியளவில் தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்திருந்தபோதிலும் கொவிட் பிரச்சினை காரணமாக பொது நிர்வாக அமைச்சு மூடப்பட்டுள்ளமையினால் தாமதமாகியுள்ளன. எம்முடனான கலந்துரையாடலில் பல அதிகாரிகள் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டது.