கொழும்பு துறைமுக ஊழியர்களுக்கு ஆதரவாக திருமலை துறைமுக ஊழியர்கள்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய கம்பனிக்கு வழங்கப்படுவதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக திருகோணமலை துறைமுக தொழிற்சங்கங்கள் களமிறங்கியுள்ளன.
மேலும் நாளையதினம் (01) ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாகவும் திருகோணமலை துறைமுகத்தின் சுதந்திர ஊழியர் சங்கத்தன் தலைவர் எச்.எம்.ஏ ஹேரத் தெரிவித்துள்ளார்.
தாய் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தற்போது கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருகோணமலை தொழிற்சங்கங்கள் இணைந்து தொழிற்சங்கமொன்றை அமைத்து தற்போது சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. அத்துடன் நாளை பகல் 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரை திருகோணமலை துறைமுகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கருத்து வௌியிட்டார்.
இதேவேளை, துறைமுக திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும் அத்தியவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி நேற்று (30) விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.