2016 இற்கு பின்னர் சேவையில் இணைக்கப்பட்ட பட்டதாரிகளின் ஓய்வூதியத்திற்காய் போராட அழைப்பு

அரச சேவையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் ஓய்வூதிய உரிமையை பெற்றுக்கொடுக்க போராட ஒன்றிணையுமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலையத்தின் அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (30) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வழைப்பை விடுத்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் வரவுசெலவு திட்டத்தில் 2016ம் ஆண்டு அரச சேவையில் இணையும் அனைவரினதும் ஓய்வூதிய உரிமையை இல்லாமலாக்குவதாக முன்மொழிவொன்றை கொண்டு வந்தனர். எனினும் அதற்கான சட்ட மூலத்தை அவ்வரசாங்கம் நிறைவேற்றவில்லை. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இம்முறையை ரத்து செய்வதாக டலஸ் அலகப்பெரும ஒரு முறை தெரிவித்திருந்தார். எனினும் இன்று வரை வழங்கப்படும் நியமனக்கடிதங்களில் ஓய்வூதியம் தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு உடன்படவேண்டும் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது 2016ம் ஆண்டில் இருந்து அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட அரச ஊழியர்களின் ஓய்வூதியம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடையது மாத்திரமல்ல. வைத்தியர்கள், படையினர், பொலிஸார் என அனைவரினதும் ஓய்வூதியம் தற்போது நிறுத்தப்பட்டேயுள்ளது. 2016ம் ஆண்டில் இருந்து இன்று வரை அரச சேவையில் சுமார் ஒரு இலட்சம் பேர் வரை இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்விடயங்களை கருத்திற்கொண்டுதான் நாம் அபிவிருத்தி உத்தியோகத்தர் சக்தியொன்றை கட்டியெழுப்புவோம். உரிமைகளை வென்றெடுப்போம் என்று போராட்டங்களை ஆரம்பித்துள்ளோம். எனவே அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் ஒரே மத்தியநிலையமாக ஒன்றிணைந்துஅபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில் கௌரவத்தை பாதுகாப்பதுடன் மக்களுக்கு சேவை வழங்கக்கூடியவகையில் இச்சேவையை மறுபடியும் மாற்றியமைக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்கொடுப்போம்.

ஏனென்றால் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி என்பது அரச பதவியாகும். இந்நாட்டில் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களின் பணத்தில்தான் நாம் சம்பளம் பெறுகிறோம். ஜனாதிபதியினதோ பிரதமரினதோ பணத்தில் நாம் சம்பளம் பெறவில்லை.எனவே எமக்கு திருப்தியான அரச சேவையை செய்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்க வேண்டும்.

Author’s Posts