விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய 12 பில்லியன் ரூபா (1200) கோடி) ரூபா பணத்தை வழங்காமல் சுகாதார அமைச்சு காலம் தாழ்த்துவதால் எதிர்காலத்தில் பல சுகாதார சேவைகள் தடைப்படும் அபாயம் தோன்றியுள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கம் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
குறித்த 1200 கோடி ரூபாவில் சுமார் 500 கோடி ரூபா வரையான தொகையானது 6 மாதம் தொடக்கம் ஒரு வருடம் வரையான காலப்பகுதியில் செலுத்தப்படாதவை என்றும் ஒக்சிஜன் விநியோகத்திற்கு மாத்திம் 15 கோடி ரூபாவும் ஆய்வுகூட சேவைக்கு 250 கோடி ரூபாவும் செலுத்தப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பல நிறுவனங்கள் தமது சேவையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக கடந்த வாரம் அநுராதபுர போதனா வைத்தியசாலைக்கு ஒக்சிஜன் வழங்கும் நிறுவனம் தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை கவனத்திற்கொண்டு கடன் தொகையை விரைவில் செலுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நாட்டில் நிலவும் பொருளாதார நிலையை கவனத்திற்கொண்டு சேவைகளை இடைநிறுத்தவிடாமல் செலவை கட்டுப்படுத்த திறமையான நிருவாகிகளை நியமிப்பதனூடாக சுகாதார சேவையை பாதிக்கப்படாமல் கொண்டு நடத்த முடியும் என்றும் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.