மாணவர்களுக்கு பகுதிநேர வேலைவாய்ப்பு - ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

மாணவர்களுக்கு பகுதிநேர வேலைவாய்ப்பு - ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

பாடசாலை மாணவர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பிலான முன்மொழிவுக்கு பிரதான ஆசிரியர் சங்கங்களான இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்பன கடும் எதிர்ப்பை வௌியிட்டுள்ளன.

16 - 20 வயது வரையான மாணவர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான அனுமதியானது குறைந்த வருமானமுடைய மாணவர்களுக்கான கற்றல் வாய்ப்பினை இல்லாது செய்யும் என்று குறித்த சங்கங்கள் கவலை வௌியிட்டுள்ளன.

த மோர்கிங் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ, மாணவர்களை பகுதி நேரமாக வேலை செய்ய அனுமதிப்பது, பல ஆண்டுகளாக நெருக்கடியில் இருக்கும் கல்வித்துறையை மேலும் பாதாளத்தில் தள்ளும் முடிவு என்று குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போதைய கல்வி முறையின் கீழ், தமது வாழ்வின் இரண்டு முக்கிய புள்ளிகளான சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தர (A/L) பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 முதல், பல சந்தர்ப்பங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், பல தரங்கள் தொடர்பான பாடத்திட்டங்கள் முறையாக பூர்த்தி செய்யப்படவில்லை. பாடத்திட்டங்கள் உள்ளடக்கப்படாதது முக்கியமாக O/L மற்றும் A/L பரீட்சைகளுக்கு அமரவிருக்கும் மாணவர்களையே பாதிக்கின்றது. இவ்வாறான நிலையில், சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பகுதி நேர அடிப்படையில் கூட மாணவர்களை வேலைகளில் ஈடுபடுத்த அனுமதிப்பது மிகவும் தவறான முடிவாகும்.”

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்குப் பதிலாக பல்வேறு வேலைகளில் ஏற்கனவே ஈடுபட்டு வருகின்றனர். கல்வித் துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் இத்தகைய எதிர்மறையான போக்குகளுக்கு சட்டப்பூர்வ அடித்தளத்தை பல்வேறு சட்டங்கள் மூலம் வழங்க முயற்சிப்பது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் குற்றம் சாட்டினார்.

இதேவேளை, கருத்து வௌியிட்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, மாணவர்களுக்கு வேலை செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடுமையாக எதிர்ப்பதாகவும் எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை உட்பட தேவையான நடவடிக்கைகளை தமது சங்கம் தொடங்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

“மாணவர்களுக்கு இவ்வாறு பணிபுரியும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் சமுதாயத்தில் உள்ள வறுமைக்கோட்டின் கீழுள்ள பிள்ளைகள் பாடசாலைக் கல்வியில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். பணக்கார பெற்றோரின் குழந்தைகள் ஒருபோதும் வேலை செய்ய மாட்டார்கள். அவர்கள் கல்வியை வெற்றிகரமாக முடிக்கும் போது, ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் படிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிடுவார்கள். அத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்தும் திட்டத்தை நாம் எவ்வாறு அங்கீகரிப்பது? இதனை ஆரம்ப கட்டத்திலேயே நிறுத்துமாறு அரசை கேட்டுக்கொள்கிறோம்,” என்றார்.

மாணவர்களுக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டிய தருணத்தில், கல்வியறிவு இல்லாத தலைமுறையினரின் கீழ் அரசியல்வாதிகள் தங்கள் ஊழல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கும் வகையில் கல்வியை மட்டுப்படுத்த அரசாங்கம் முடிவுகளை எடுக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார். எனவே, ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வி வல்லுநர்கள் என அனைத்து முற்போக்குக் கட்சிகளும் ஒன்றிணைந்து அரசின் இந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டும் என்றார்.

 16 முதல் 20 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பகுதி நேர வேலைகளில் ஈடுபடுவதற்கு வாரத்திற்கு அதிகபட்சமாக 20 மணித்தியாலங்களுக்கு உட்பட்ட வகையில் தொழிலாளர் சட்டங்களை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார அண்மையில் தெரிவித்திருந்தார்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 72 அபாயகரமான தொழில்களைத் தவிர, பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் துப்புரவு சேவைகள் தொடர்பான வேலைகளில் ஈடுபட மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பதில் இந்த திட்டம் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

பல குடும்பங்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதாரச் சிரமங்களாலும், பாடசாலைகள் சரியான முறையில் பாடங்களை நடத்தாததாலும், சிரேஷ்ட தர மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தி பல்வேறு வகையான வேலைகளில் ஈடுபடும் போக்கு காணப்படுவதாக த மோர்னிங் அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளது. O/L மற்றும் A/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடையே இது அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆதாரங்களின்படி, வேலைகளுக்குத் திரும்பும் மாணவர்களில் பெரும்பாலோர் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் அல்லது அதற்கு அருகிலுள்ள பல்வேறு தினசரி-கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட சில மாணவர்கள், குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள், முறையான தொழிலுக்குப் பதிலாக மணல் அகழ்வு போன்ற பல்வேறு முறைசாரா வழிகளில் பணம் சம்பாதிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக, கடந்த இரண்டு வருடங்களில் நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் பல சந்தர்ப்பங்களில் மூடப்பட்டன. ஒன்லைன் மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முயற்சித்த போதிலும், பாடசாலைகள் மூடப்பட்டதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்லைன் ஊடாக கற்பிக்க/கற்க தேவையான வசதிகளை அரசு செய்து தரவில்லை என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும், 2021 ஜூன் நடுப்பகுதியில் இருந்து ஓகஸ்ட் மாதம் வரை ஆசிரியர் - அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த தொடர் வேலை நிறுத்தம் காரணமாக பாடசாலைகளின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி காரணமாக பாடசாலைகளும் பல வாரங்களாக மூடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மாணவர்கள் பகுதி நேரம் வேலை செய்வதற்கான முயற்சி தொடர்பில் இதுவரை கல்வியமைச்சு தரப்பில் இருந்து எவ்வித கருத்தும் வௌியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

த மோர்னிங்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image