தொழிலின்றி நிர்க்கதியாகியுள்ள ஓல்ட்டன் தோட்ட மக்களின் கண்ணீர் கதை!

தொழிலின்றி நிர்க்கதியாகியுள்ள ஓல்ட்டன் தோட்ட மக்களின்  கண்ணீர் கதை!

ஹொரணை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் மஸ்கெலிய ஓல்ட்டன் தோட்டத்தின் 40 தொழிலார்கள் தொழில் இழந்து பெரும் நிர்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி முதல் மலையக பெருந்தோட்ட தொழிலார்களால் முன்னெடுக்கப்பட்ட ரூபா 1000 சம்பள் உயர்வு போராட்ட சந்தர்ப்பத்தில் தோட்ட முகாமையாளர் தாக்கப்பட்டதன் எதிர்வினையாகவே இவர்கள் தொழில் இழந்துள்ளனர் என தெரிவிக்கின்றனர்.

இவர்களின் இந்த தொழில் இழப்புக்கான காரணத்தை தேடி சென்ற போது இதன் பின்னனியில் இருந்த பல காரணங்கள் வெளிப்பட்டதுடன் கால காலமாக தொழிற்சங்க சந்தா செலுத்தி தாம் அங்கம் வகித்த தொழிற்சங்கங்கள் தங்களை கைவிட்டுள்ளதாக இவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

தொழிலாளர்களின் ரூபா 1000 சம்பள உயர்வு கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் கடந்த 05.02.2021 அன்று பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஓல்ட்டன் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இருந்து தேயிலை தூள் ஏற்றி சென்ற வாகனம் ஒன்று 02.02.2021 அன்று இரவு சாமிமலை மல்லிகைப்பூ சந்தியில் வழிமறிக்கப்பட்டு மீண்டும் குறித்த தொழிற்சாலைக்கே வாகனம் கொண்டு வரப்பட்டதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தேயிலை தூள் ஏற்றிய வாகனம் மீண்டும் தொழிற்சாலைக்கு திருப்பப்பட்டதன் காரணமாக கோபம் அடைந்த தோட்ட முகாமையாளரால் இந்த வாகனத்தை திரும்ப கொண்டு வரும் செயற்பாட்டை முன்னெடுத்த மஸ்கெலிய பிரதேச சபை தலைவி உட்பட இன்னும் பல தோட்ட தொழிலார்களின் முன்னிலையில் ஒரு தொழிற்சங்கத்தின் தலைவி முகாமையாளரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் முழு தோட்டமும் தோட்ட முகாமையாளர் வேண்டாம் என கோரி 03.02.2021 அன்று வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர்.

இந்த தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவியும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஓல்ட்டன் தோட்ட தொழிலாளர்களின் முகாமையாருக்கு எதிராக முன்னெடுத்த போராட்டம் கடந்த 05.02.2021 அன்று முன்னெடுக்கப்பட்ட ரூபா 1000 சம்பளத்திற்கான ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்துடன் இணைக்கப்பட்டு முகாமையாளருக்கு எதிரான போராட்டம் மறைக்கப்பட்டு முழுமையாக ரூபா 1000 த்திற்கான சம்பள போராட்டமாக வெளிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், ரூபா 1000 சம்பளத்திற்கான ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் 05.02.2021 முடிவடைந்து 06.02.2021 அன்று பெருந்தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பிய நிலையில் ஓல்ட்டன் தோட்ட தொழிலாளர்கள் மாத்திரம் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படிருந்தனர்.

இவர்கள்; தொழிலாளர்களை தாக்கிய முகாமையாளர் தமக்கு வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டது ரூபா 1000 சம்பளத்திற்கான அடையாள வேலை நிறுத்தத்தின் தொடர்கதை என்ற மாயையே வெளியில் காட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த17.02.2021 அன்று தோட்ட முகாமையாருடன் இந்த பிரச்சினையை பேசி முடிக்க வேண்டும் என்று பிரதான கள உத்தியோகத்தர் கூறியதிற்கு இணங்க தொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஓல்ட்டன் தோட்ட முகாமையாளரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு திட்டமிட்ட சில தொழிலாளர்களால் முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் தாக்கப்ட்ட நிலையில் அதனை தடுப்பதற்கும் சில தொழிலாளர்கள் முற்பட்டதனால்; அங்கு பாரிய தள்ளுமுல்லு ஏற்பட்டுள்ளது. இதனை காட்சியாக சிலர் கைத்தொலைபேசியிலும் பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர்கள் மஸ்கெலிய பொலிசில் புகார் செய்ததன் பின்னர் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த முகாமையாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோ காட்சி சிலரால் சமூ வளைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதனை ஆதாரமாக கொண்டு மஸ்கெலிய பொலிசார் அடையாளப்படுத்திய ஓல்ட்டன் தோட்டத்தின் சில தொழிலாளர்களை கைது செய்து அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதனை தொடர்ந்து இவர்கள் விளக்கமறியளில் வைக்கப்பட்டு ரொக்கம் மற்றும் சரீர் பினையில் விடுதை செய்யப்பட்டதுடன் இவர்களுக்கான வழக்கு தொடர்ந்து அட்டன் நீதவான் நீதி மன்றில் இடம்பெறுகின்றது.

இந்நிலையில் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 25 பேருக்கும் வழக்கு தாக்கல் செய்யப்படாத 15 பேருக்கும் என 40 பேருக்கு எதிராக முகாமையாளர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்து தோட்ட முகாமையாள் கடிதம் பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதங்கள் 22.03.2021 திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் 27.03.2021 அன்று தொழிலாளர்களுக்கு இந்த கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனால் தாம் இந்த ஓல்ட்டன் தோட்டத்தில் தொழில் இழந்துள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தொழில் இழந்தவர்களில் பெரும்பாளானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடிதம் கிடைத்தவுடன் தாம் முகாமையாரை தாக்கவில்லை தம்மை பேச்சுவார்த்;தைக்கு அழைத்தால் தாம் அவ்விடத்திற்கு சென்றதாகவும் அந்த இடத்தி;ல முகாமையாளர் தாக்கப்பட்டதனால் தாம் அதனை தடுக்க முற்பட்டநிலையிலேயே தம்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பெரும்பாலான தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தாம் தொழில் இழந்ததால் தொழில் செய்த காலத்தில் தாம் உழைத்த போனஸ் கொடுப்பனவுகள் உட்பட அனைத்து விடயங்களும் தமக்கு நிறுத்தப்பட்டள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தமக்கான தொழில் மறுக்கப்பட்டதை தாம் இதுவரை அங்கம் வகித்த தொழிற்சங்கங்களுக்கு அறிவித்த போதும் அதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்காத் நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தாம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்க்கையை கொண்டு நடாத்துவதாக தெரிவிக்கின்றனர். சில குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் தொழிலை இழுந்துள்ளார்கள் என்பது பெரும் வேதனைக்குறிய விடயமாகும்.

இந்நிலையில் ஓல்ட்டன் தோட்டத்தில் இருந்து தொழில் இழந்த 40 பேரில் 15 பேர் மாத்திரம் சுமார் 15 கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்திற்கு தின கூலிகளாக சென்று தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கும் தினமும் தொழில் கிடைப்பதில்லை என்பதோடு தினமும் தாம் சுமார் 3 மணித்தியாலங்களை பயணம் செய்வதில் செலவிடுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த தொழில் இழந்தவர்களை நம்பியே குடும்பங்கள் உள்ளமையினால் தொழில் இழந்த பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தாம் தள்ளப்பட்டுள்ளதாக கண்ணீர் விடுகின்றனர். இதில் பல குடும்பங்களின் பிள்ளைகளின் மருத்துவ செலவுகள் மாதாந்தம் பல ஆயிரங்களை கடக்கும் நிலையில் தமது ஏனைய பிள்ளைகளின் உணவு மற்றும் கல்விக்கான செலவினை சமாளிக்க முடியாது உள்ளது என்றும் சில நாட்களில் தண்ணீர் மட்டுமே தமது பசியை போக்குவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாதிக்கப்பட்ட இக்குடும்பங்களில் முதியவர்களும் தங்கி வாழ்வதனால் அவர்களுக்கான மருத்துவம், உணவு போன்றவற்றுக்கு பெரும் சிரமம் நிலவுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பல குடும்பங்களில் வயது முதிந்த பெற்றோர்கள் இவர்களில் தங்கி வாழும் நிலையில் அவர்களின் மருத்துவ மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் சிரமமம் நிலவுகிறது. இதனால் பெரும்பாலான முதியவர்கள் தமக்கான மருத்துவ தேவையை கைவிட்டுள்ளனர். தவறு செய்யாத நிலையில் தாம் தண்டிக்கப்படுவதாகவும் அப்படியயே தவறு செய்ததாக முகாமை கருதுமாக இருந்தால் மன்னிப்புக்கேட்க தாம் தயாராக உள்ளதாகவும் ஆனால் முகாமையை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் தமக்கு கிடைப்பதில்லையென்றும் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர். தாம் எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

மீண்டும் தொழில்வாய்ப்பை வழங்கி தமது பட்டினிச்சாவை தவிர்க்க யார் முன்வருவார்கள் என்று ஏங்கும் இம்மக்கள் பல தரப்பினரை சந்தித்தும் தமக்கு இது வரை எவ்வித நன்மையும் கிடைக்கவில்லையென்றும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தமக்கான தொழிலை மீள பெற்றக் கொடுத்து தமது குடும்பங்கள் பட்டினியால் இறப்பதை தடுப்பதற்கு வழிகாட்டு யார் முன்வருவார்கள் என்ற ஏக்கத்துடன் இவர்கள் பல தரப்பினரையும் அனுகியும் எந்த பலனும் இன்றி செய்வதறியாது தவிக்கின்றனர்.

 

Author’s Posts