உலக உயிர்களை காக்கும் போராட்டத்தின் முன்கள வீரர்களின் கதை இது

உலக உயிர்களை காக்கும் போராட்டத்தின் முன்கள வீரர்களின் கதை இது

கொவிட்-19 பெருந்தொற்று சர்வதேச ரீதியில் கோரத்தாண்டவமாடி பல இலட்சக்கணக்கான உயிர்களை காவுகொண்டுள்ள நிலையில், உலகமே அச்சத்தில் உறைந்துபோய் இருக்கின்றது. ஆனால், தங்களது உயிரை துச்சமெனக்கருதி உலக மக்களின் உயிர்காக்கப் போராடும் முன்களப்பணியாளர்களாகிய சுகாதாரத் துறையினர் இல்லையென்றால், கொரோனா வைரஸ் இன்னும் எத்தனையோ இலட்சம் உயிர்களைக் காவுகொண்டிருக்கும். இவர்களே இன்றைய உலகில் மனித உயிர்களைக் காக்கும் போராட்டத்தின் வீரர்கள்.

கொரோனா வைரஸ் எதிர்த்து முன்களத்தில் நின்று போராடும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினரில், தாதியர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களின் சேவையும், அர்ப்பணிப்பும், போராட்டமும் அளப்பரியது. அவற்றை வார்த்தைகளால் வரையறைக்கு உட்படுத்திவிட முடியாது. தாதியர்கள் நாள்தோறும் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கான உரிய தினம் இன்று. சர்வதேச தாதியர் (செவிலியர்) தினம். மே 12.

இன்றைய சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரதான பயிற்றுவிப்பு அதிகாரி புஸ்பா ரம்யானி டி சொய்ஸா பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Ramyani_De_Soysa.jpg

உலக அளவில் 7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். எனினும், அவர்களின் உயிர்களை பாதுகாக்க சேவையாற்றும் தாதியர்களின் எண்ணிக்கை 2 மில்லியன் ஆகும். அதேபோல் இலங்கையில் தற்போதுள்ள 21 மில்லியன் சனத்தொகைக்கு, சுமார் 42,000 எண்ணிக்கையிலான தாதியர்களே சேவை வழங்குகின்றனர். நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி அவர்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக தாதியர்கள் பல்வேறு வகையில் அர்ப்பணிப்புக்களை செய்கின்றனர். உலகளவில் ஆயிரக்கணக்கான தாதியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான தாதியர்கள்

இலங்கையில் இன்று வரையில் 243 தாதியர்கள் இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதேநேரம் ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். எனினும், அவர்கள் தங்களின் சேவையை அர்ப்பணிப்புடன் தொடர்கின்றனர்.

2018 ஆம் ஆண்டு என்பது கொவிட் பரவலுக்கு முந்தைய ஆண்டாகும். இலங்கையில் 641 வைத்தியசாலைகள் இருந்தன. அத்துடன் 84,000 இற்கும் அதிகமான கட்டில்கள் இருந்தன. சிகிச்சைக்காக வைத்தியசாலைகளை நாடிய நோயாளர்களின் எண்ணிக்கை 57 மில்லியனுக்கும் அதிகமாக பதிவாகியது. எமது நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிடும்போது நபரொருவர் ஐந்து, ஆறு தடவைகள் சிகிச்சைக்காக வந்திருக்கக்கூடும் என்பதே இதற்கான காரணமாகும். வேறு நோய் நிலைமைகள் ஒவ்வொரு நாளும் தலைதூக்கியமையால், மிகவும் சிக்கலான தன்மையிலேயே சுகாதாரத்துறை இருந்தது.

தாதியரின் கடமையும் அர்ப்பணிப்பும்

நோயாளர் சிகிச்சை அறையின் (வார்ட்) பொறுப்பு, அதன் முகாமைத்துவம், உபகரணங்களை நிர்ணயம் செய்தல், அவற்றை பகிர்ந்தளித்தல், வார்ட்களை முகாமைத்துவம் செய்யும்போது பொருட்களை உரிய இடங்களில் நிலைப்படுத்தல், நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் தாதியர்கள் தலைமைத்துவம் வழங்குகின்றனர். ஏனெனில் அவர்கள் தான் வார்டின் முகாமைத்துவத்தையும், பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதனாலாகும்.

நோயாளர்களை குணப்படுத்துவதற்காக அனைத்து சுகாதார தரப்பினரையும் ஒன்றிணைத்து, அவர்களின் உயிரைக் காக்கும் செயற்பாடு தாதியின் கரங்களிலேயே இருக்கின்றது.

உதரணமாக, தாதி ஒருவர் காலையில் வார்ட்டுக்கு பணிக்கு சமுகமளிக்கும்போது, அனைத்து நோயாளர்ளையும் பொறுப்பேற்று, சத்திர சிகிச்சைக்காக தயார்படுத்தல், பரிசோதனைகளுக்கு தயார்படுத்தல் குருதியை பெறுதல், அவசியமான சிகிச்சைகளுக்காக நோயாளர்களை உரிய நிபுணத்துவ வைத்தியரிடம் அனுப்புதல், பரிசோதனைகளுக்கு அனுப்புதல், உணவு, குடிநீர் வழங்குதல், அவர்களுடைய இயற்கை தேவைகளை பூர்த்தி செய்தல் முதலான அனைத்தையும் உரிய முறையில் முகாமைத்துவம் செய்து, தரமான சேவை ஒன்றை வழங்குவதற்கு அவர் தமது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்.

நோயாளர்களின் மனித உரிமைகளை பாதுகாத்து நாங்கள் இந்த பயணத்தை தொடரவேண்டும். இவை அனைத்தையும் விட முக்கியமானது மனிதாபிமானம் என்பதை நாங்கள் அனைவரும் தெரிந்திருப்பது முக்கியமானதாகும்.

21ஆம் நூற்றாண்டில் பயணிக்கும் நாங்கள் எங்களுடைய குறைபாடுகளை ஒருபோதும் நாங்கள் சமூகத்திற்கு கூறி இருக்கவில்லை. இது தொடர்பில் நாங்கள் குரலெழுப்பவில்லை. ஆனால் இம்முறை 'தாதியர்களின் தலைமத்துவ குரலை சமூகமயப்படுத்துவதற்கு, தாதிகள் தலைமைத்துவத்தின் குரலை உரிய தரப்பினருக்கு கொண்டு செல்லுங்கள்' என்பதே இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாகும். இதற்கு காரணம் சுகாதாரத் துறையின் முதுகெலும்பு தாதியை சேவையாகும். தாதியர் சேவை வீழ்ச்சி அடைந்தால் நோயாளிகளுக்கான சிறந்த சேவை என்பது கனவாகும்.

எனவே இதுபோன்ற ஒரு தோற்று நோய் பரவலுக்கு மத்தியில் அவசியமான பணியாளர்களை வழங்குதல், மனித வளங்களை வழங்குதல் சுகாதார துறையினரை பாதுகாத்தல் என்பன மிகவும் முக்கியமானவையாகும்.

தாதியர்களுக்கு பெரும் பற்றாக்குறை

ஆனால் தற்போது இருக்கின்ற தாதியர்களின் எண்ணிக்கை 42,000 ஆகும். நாளாந்தம் அதிகரிக்கும் கொவிட் பரவல் மட்டுமல்ல வேறு நோயாளர்களும் இதே எண்ணிக்கையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றமை பலரும் அறியாத காரணமாகும். இவர்களின் பாதுகாப்புக்கு பொறுப்புக்கூற வேண்டியது சுகாதாரத் துறையின் முக்கிய பங்காளர்களாக தாதியர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. எனவே தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உரிய தரப்பினர் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

ஏனெனில் அனர்த்தம் என்பது கூறிக்கொண்டு வருவதில்லை. அது மனிதர்கள் மூலமாகவோ அல்லது இயற்கையாகவோ ஏற்பட முடியும். அதேபோல, இது போன்ற தொற்று நோய் பரவல் ஏற்படும். இது எப்போது வரும், எப்போது முடிவடையும் என்பதை கூற முடியாது. தற்போதைய கொவிட் பரவல் அலையை பார்க்கும்போது சுகாதாரத் துறையினர் கூட நோய்வாய்ப்படும் நிலைமையும், அவர்கள் உயிர் பறிக்கப்படும் நிலைமையும் கூட ஏற்படலாம். எனவே, கட்டாயமாக சுகாதாரத் துறையில் குறிப்பாக தாதியர்கள் தேவைக்கு மேலதிகடமாக பணியாளர்களை வைத்திருப்பது மிக முக்கியமானதாகும். அவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டால் இந்த சேவையை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கு உரிய தாதிகள் பணிக்குழாம் இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

தாதியர்களின் கோரிக்கைகளை அறிவீர்களா?

எனவே, சனத்தொகையின் அளவுக்கு ஏற்றவாறு தாதியர்கள் ஆட்சேர்ப்பு இருப்பது அவசியமாகும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாம் கூறுகின்றோம். 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 212 அளவிலான தாதியர்களே இருந்தனர். இது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும்

நோயாளர்களின் உயிர்களைப் பாதுகாத்தல், அவர்களை சுத்தமாக வைத்திருத்தல், அனைத்து சிகிச்சைகளுக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ளல், நோயாளர் வார்டுக்கு வைத்தியரை அழைத்து சிகிச்சையை வழங்குதல், வைத்தியர் வரும்வரை பார்த்துக் கொண்டிருக்காமல் நோயாளரின் உயிரைக் காப்பதற்காக நடவடிக்கையை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தாதியர்களின் கரங்களிலேயே இருக்கின்றன என்பதை நீங்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

எனவே, வருடாந்தம் தாதியர்கள் பலப்படுத்தவும், அவர்களுக்கு கௌரவத்தை செலுத்தவும் இவ்வாறான தினம் முக்கியத்துவமிக்கதாய் அமைகின்றது.

வருடாந்தம் ஓய்வுபெறும் தாதியர்களின் எண்ணிக்கை

தாதியர் துறை சேவையின் நிலைத்தன்மையை பேணுவதற்கு சில விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். உடனடியாக தாதியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய் வேண்டும். இதற்காக நாங்கள் முன்வைக்கும் விடயம், வருடாந்தம் ஆட்சேர்க்கும் எண்ணிக்கையை உரிய அளவில் பேணுதலாகும். எனினும் இன்னும் பல வருடங்களுக்கு இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாது. ஏனெனில் வருடாந்தம் 1500 இற்கும் அதிகமானோர் ஓய்வு பெறுகின்றனர். அவ்வாறு ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியுமாயின் தாதியர்களின் ஓய்வு பெறும் காலத்தை 63 வயது வரை நீடிப்பது இதற்கு ஒரு நிவாரணமாகும் என்பதை நாங்கள் அறிந்து கொள்ளுதல் முக்கியமானதாகும்.

இவ்வாறான காலப்பகுதியில் வசதிகளை ஏற்படுத்துவது என்பதற்கு அப்பால் மனித வளத்தை மேம்படுத்துவது தொடர்பில் எமது அவதானம் செலுத்தப்படாவிட்டால், ஒருநாளும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைகளை செயற்படுத்த முடியாது. ஏனெனில் அதிதீவிர சிகிச்சை பிரிவு என்பது முழுமையாக உயிரற்ற ஒரு உடலுக்கு உயிர் கொடுத்து, மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வருவது என்பது மரணத்திலிருந்து உயிரை பாதுகாக்கும் செயல்முறையாகும். இந்த செயல்முறையின் போது தாதியர்களின் செயற்பாட்டை உரிய முறையில் முன்னெடுக்காவிட்டால் அவர்களின் உயிரை பாதுகாக்க முடியாது.

டிப்ளோமாவுடன் மட்டுப்படுத்தப்படும் தாதிய கல்வி

தாதியர்களாகிய எங்களுக்கு எந்த குறைபாடு அல்லது சிக்கல்கள் இருந்தாலும் நாங்கள் எங்களுடைய உயிரை அர்ப்பணிப்பு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டாலும் எங்களுக்கு நோய்வாய்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் நாங்கள் உயிர் துறக்க வேண்டிய ஏற்பட்டாலும் நிச்சயமாக நாங்கள் நோயாளரின் உயிரை காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

தாதியதுறை அல்லது வைத்தியத் துறைக்கு இணையாக மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டுகின்றது. தாதிய சேவையானது தற்போது டிப்ளோமா வரையே இருக்கின்றது. எனினும், இது பட்டப்படிப்பு வரை மேம்படுத்தப்பட வேண்டும் என 1991 முதல் நாங்கள் போராடி வருகின்றோம். ஆனால் தற்போது 21 நூற்றாண்டு நூற்றாண்டுவரை அதை செயல்படுத்த முடியாத நிலை இருக்கின்றது. முழு உலகமும் தாதிய சேவையில் பட்டப்படிப்புக்கு அப்பால் அபிவிருத்தி அடைந்து இருக்கின்றது. இது மிகப்பெரிய அபிவிருத்தியாகும். நோயாளர்களை குணப்படுத்துவதற்கான மிக முக்கியமான புதிய தொழில்நுட்பம், விஞ்ஞானம் என்பவற்றின் அடிப்படையில் மிகவும் முக்கியமான விடயம் தான் கல்வியாகும். எனவேதான் தாதிகள் தொழில் துறையில் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும்.

 கொவிட்-19 பரவல் இவ்வாறாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஏனைய நோய்கள் குறையவில்லை என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது. தொற்று நோய்கள், திடீர் விபத்துகள் என்ற பல நோய்கள் தொடர்பில் நோயாளர்கள் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற நிலைமைக்கு மத்தியிலேயே இந்த கொரோனா அலைக்கும் தாதியர்கள் முகம் கொடுக்கின்றனர்.

சமூகத்தின் பொறுப்பு என்ன?

நாட்டின் சமூகத்தினர் என்ற அடிப்படையில், நோய்த் தன்மைக்கு உட்படாதிருப்பதற்கான பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது. சிறந்த வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் தாங்கள் நோயாளர்களை நோயாளர் ஆகாமல் இருப்பதற்கும், என்ன செய்யவேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.

உங்களுடைய ஒத்துழைப்பு சுகாதாரத்துறைக்கு அவசியமான நேரம் இதுவாகும். எனவே சுகாதாரத்துறையினருடன் இணைந்து, அவர்களுடைய செயற்பாடுகள் தொடர்பில் புரிந்துகொண்டு, நாங்கள் இருவரும் கைகோர்த்து செயல்பட்டால் தான் இந்த நிலைமைக்கு முகம் கொடுக்க முடியும். நாம் இருவரும் கைகோர்த்து இந்த பயணத்தை தொடர்வோம். நாங்கள் எங்களுடைய பொறுப்பை நூற்றுக்கு நூறு வீதம் நிறைவேற்றுவோம். அதே போன்று நீங்களும் உங்களுடைய பொறுப்பை நூற்றுக்கு நூறு வீதம் நிறைவேற்றுங்கள் என்று கோருகின்றேன் என கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரதான பயிற்றுவிப்பு அதிகாரி புஸ்பா ரம்யானி டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image