பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் உலக பிரசார நடவடிக்கையை நிமித்தம் ப்ரொடெக்ட் தொழிற்சங்கம் முன்னெடுத்த அமைதிப் போராட்டம் நேற்று (28) காலை 9.30 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.
16 நாட்கள் உலக பிரசார நடவடிக்கை நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர்ச்சியான செயற்பாடுகளின் இரண்டாம் செயற்பாடாக நடைபெற்ற இவ்வமைதி போராட்டத்தில் ப்ரொடெக்ட் தொழிற்சங்கத்துடன் ஏனைய பல தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் கைகோர்த்தன.
இவ்வமைதி போராட்டத்தின் போது, தொழில் உலகில் இடம்பெறும் வன்முறைகளை ஒழித்து பாதுகாப்பான தொழில் உலகை உறுதிப்படுத்துவதற்கான ILO C190 சமவாய மற்றும் வீட்டுப் பணிப்பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ILO C189 சமவாயம் என்பன குறித்து பொதுமக்கள் தௌிவுபடுத்தும் வகையிலான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். அத்துடன் ஆதரவான பதாதைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை இல்லாதொழிப்போம்' என்ற தொனிப்பொருளில் கையெழுத்து பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிரான உலகளாவிய 16 நாட்களில் குடும்ப வன்முறை ஒழிப்பு மற்றும் கொலைகளைத் தடுப்பது என்ற உலகளாவிய கருப்பொருளின் அடிப்படையில் ஹிஷாலினயின் மரணத்திற்கு நீதி வழங்குமாறு கோருவதே நோக்கம் என ப்ரொடெக்ட் சங்கத்தின் பொதுச் செயலாளர் கல்ப்ப மதுரங்க தெரிவித்தார்.