பெண் ஊடகவியலாளர்களுக்கு எதிரான இணைய வன்முறையும் வெறுப்பு பேச்சும்

பெண் ஊடகவியலாளர்களுக்கு எதிரான இணைய வன்முறையும் வெறுப்பு பேச்சும்

அனுதர்ஷி லிங்கநாதன்

பால்நிலை சார்ந்த மதிப்பீடுகளை உருவாக்குகின்ற சமூகத்தில் பெண்களும் சிறுமிகளும் வன்முறைகளையும் துஷ்பிரயோகங்களையும் எதிர்கொள்கின்றனர். பெண்களின் குரல்களை மௌனிக்கச் செய்வதற்கான ஆயுதமாக இன்றைய காலத்தில் இணையவெளி வன்முறைகள் அதிகரித்துவருகின்றன. இவை உளவியல் ரீதியான தாக்கங்களை அதிகம் ஏற்படுத்துகின்றன. இந்த இணைய வன்முறைகள் இணைய வெளிகளைக் கடந்தும் தொழில் மற்றும் நாளாந்த வாழ்கையிலும் தாக்கம் செலுத்துவனவாக இருக்கின்றன.

இணையத்தினூடாக ஒருவர் கேலிசெய்யப்பட்டாலோ, அச்சுறுத்தப்பட்டாலோ, மிரட்டப்பட்டாலோ, பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்பட்டாலோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டாலோ அது இணையவழி வன்முறை எனக்கொள்ளப்படும். வன்முறையின் எல்லா வடிவங்களும் பால்நிலையின் பரிமாணத்தைக் கொண்டுள்ளன. இணைய வெளியில் பெரும்பாலான பெண்களும் சிறுமிகளும் தாம் எதிர்கொள்ளும் வன்முறை குறித்த புரிதல் அற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதேவேளை உலகளாவிய ரீதியில் அரசியலில் பிரவேசிக்கும் பெண்கள், பெண் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அதிக அளவில் இணைய வன்முறைகளை எதிர்கொள்பவர்களாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்தியப் பத்திரிகையாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் (Gauri Lankesh) 2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 5 அம் திகதி இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பு இணைய வழித் தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அதேபோல் மோல்டிஸ்ஐ சேர்ந்த புலனாய்வு ஊடகவியலாளர் டபின் கலிசியா(Daphne Caruana Galizia) 2017 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 16 ஆம் திகதி குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு இணையம் ஊடான வன்முறைகளை எதிர்கொண்டிருந்தார். அவர் தனது இறுதி நேர்காணலில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் உடல், உள, பாலியல் ரீதியான வன்முறைகள் போன்றன தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தார்.

பிலிப்பினோ அமெரிக்கன் ஊடகவியலாளாரான மரியா ரேசா(Maria Ressa) பெண் ஊடகவியலாளருக்கு எதிரான பால்நிலை மற்றும் ஏனைய தாக்குதல்கள் பற்றிக் குறிப்பிட்டவேளை ‘தொழில்நுட்ப உதவியுடன் சமூக ஊடகங்களாலும் இணையத்தாலும் ஆண்களை விடப் பெண்கள் அதிகம் இலக்கு வைக்கப்படுகிறார்கள்’ எனத் தனது ஆய்வில் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய ஊடகவியலாளரான ரானா அயூப் (Rana Ayyub) 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ருவிட்டரில் இணையத் தாக்குதல்களை எதிர்கொண்டார். போலி வீடியோக்கள் மற்றும் 2500 க்கு மேற்பட்ட போலி ருவிற்கள் வேகமாகப் பரவியதுடன் அவருடைய தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் அச்சுறுத்தும் நோக்கில் பரப்பப்பட்டன. பாலியல் ரீதியான அச்சுறுத்தல்ளையும் அவர் எதிர்கொண்டார். இணைய ரீதியான துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் போன்றவற்றால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட ரானா அயூப் அதன் தொடர்ச்சியாக உடலியல் ரீதியான வன்முறைகளையும் எதிர்கொண்டார்.

யுனெஸ்கோ மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச நிலையம் (ICJF) ஆகியன இணைந்து 113 நாடுகளைச் சேர்ந்த 714 பெண் ஊடகவியலாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 73% வீதமான பெண் ஊடகவியலாளர்கள் இணைய ரீதியான பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் முகப்புத்தகம், ருவிற்றர், கூகுல் பிளஸ், லிங்ட் இன், வைபர், வாட்ஸ் ஆப், இன்ஸ்ரகிராம், யூரியூப், பின்ரறஸ்ற், வேர்ட் பிறஸ் போன்ற எண்ணிலடங்காத சமூக ஊடகங்கள் இன்று பயன்பாட்டில் இருக்கின்றன. அதேவேளை ஏராளமான இணைய தளங்களும் இயங்கி வருகின்றன. தெற்காசியாவில் இணையப் பரவலும் சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் அதிகமாக உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

இலங்கையில் பெரும்பாலான பெண் ஊடகவியலாளர்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துகின்றனர். அத்துடன் பலர் இணையதள ஊடகவியலாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான பெண் ஊடகவியலாளர்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் சமூகத்தில் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன் பாலியல் ரீதியான வன்முறைகள், தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை நேரடியாக முகங்கொடுத்துவரும் அதேவேளை இணைய ஊடகங்கள் மூலமாகவும் எதிர்கொண்டு வருகின்றனர். இது அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகின்றது.

“ஊடகவியலாளர் என்ற பொது வெளிக்கு அப்பால் பெண் ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் நான் இணைய வன்முறைகளை எதிர்கொண்டிருக்கின்றேன்” என்கிறார் சுயாதீன ஊடகவியலாளரான பிரியதர்சினி சிவராஜா. “குறிப்பாகச் சொல்வதானால், நான் எனது முகநூல் பக்கத்தில் அரசியல் விடயங்கள், பால்நிலை சமத்துவம் மற்றும் பால் புதுமையாளர்கள் பற்றிய தகவல்களை அல்லது அவை சம்பந்தமான கருத்துக்களைப் பதிவிடும் போது பலவாறான வெறுப்புப் பேச்சுக்களையும் எனது இன்பொக்சில் தவறான வார்த்தைப் பிரயோகங்களுடன் கூடிய இழிவான கருத்துக்கள் தொடர்ச்சியாக வருவதனை நான் அவதானித்திருக்கின்றேன். மேலும், எனது குடும்பம், தனிப்பட்ட செயற்பாடுகள், எனது ஆளுமை என்பனவற்றைக் கேலிக்குட்படுத்தும் வகையிலும், சவால்களுக்குட்படுத்தும் விடயங்களாக அவை உள்ளன. அதுமட்டுமல்லாமல் ஹெக்கர்களின் அத்துமீறல், தனிப்பட்ட படங்கள், தகவல்கள் திருடப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்படல் போன்றவை தொடர்பான முறைப்பாடுகளை நான் எனது சக பெண் ஊழியர்களிடமிருந்து அடிக்கடி அறிகின்றேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெண்களுக்கெதிரான இணைய வன்முறைகள் ஊடகத்துறையில் பெண்களின் வகிபாகத்தையும் பங்குபற்றலையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. பால்நிலைச் சமத்துவம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் சுயாதீன அறிக்கையிடலுக்கான அச்சுறுத்தலாகவே பெண் ஊடகவியலாளர்களுக்கெதிரான பல்வேறு வடிவங்களில் இடம்பெறும் வன்முறைகளைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

“நான் சுதந்திரமாக எழுதுவதற்கு தடையாகவும் அச்சுறுத்தலாகவும் இணைய வன்முறைகள் இருக்கின்றன” என்கிறார் ஊடகவியலாளரான பிரியா நடேசன். “நான் அதிகமாக பெண்கள் பிரச்சினைகள் சார்ந்தே எழுதுவேன். அந்த நேரங்களில் ஆணாதிக்க சமூகத்தினரால் மிக நெருக்கடிகளைச் சந்தித்துள்ளேன். பலர் என்னைத் தனிப்பட்ட ரீதியில் தாக்க முயன்றுள்ளதோடு பல இணையத்தினூடான மற்றும் நேரடி விமர்சனங்களையும் செய்துள்ளதோடு உயிர் அச்சுறுத்தல் நிலமை கூட ஏற்பட்டது” என்றும் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் மற்றும் பெண்ணுரிமை குறித்துச் செயற்படும் ஊடகவியலாளர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண் என்ற ரீதியில் இணையவழித் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாகச் சமூக ஊடகங்களில் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவதை அவதானிக்க முடியும்.

“நான் பெண்களது பிரச்சினைகள் தொடர்பில் இயங்குவதால் பொதுவெளியில் என்னைப்பற்றி தவறாகவும் என்னுடைய புகைப்படங்களை தவறான முறையில் தயாரித்தும் பகிர்ந்துள்ளார்கள்” என்கிறார் சுயாதீன ஊடகவியலாளரான கேஷாயினி எட்மண்ட். “எனது அனுபவங்கள் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்கின்ற அவதானத்தை தோற்றுவித்துள்ளது. அதேவேளை என் சக நண்பிகளிடம் இணையவழி வன்முறைகள் ஓருவித பயத்தினைத் தோற்றுவித்துள்ளமையும் அறியமுடிந்தது” எனவும் கேஷாயினி குறிப்பிட்டார்.

இணையவழி வன்முறைகள் பெண் ஊடகவியலாளர்களுடைய தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் வேறுபட்ட அனுபவங்களை ஏற்படுத்துகின்றன. ஒருவர் மீது குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கும் போது சுய சிந்தனையுடன் அறிவுபூர்வமாக முன்வைத்தல் அவசியம். பலர் பொய்களின் அடிப்படையிலும் உணர்வு ரீதியிலும் விமர்சனங்களை முன்வைத்துச் சமூகத்தில் குழப்பங்களையும் போலிப் பிரசாரங்களையும் முன்வைக்கின்றனர். இணையவெளியில் உளவியல் ரீதியான வன்முறைகளை பிரயோகிக்கின்ற பலர் அதன் தொடர்ச்சியாக நேரடி வன்முறை வரை செல்கின்றனர். அடிப்படைவாதிகள் பல ஊடகவியலாளர்களின் குரல்களை மௌனிக்கச்செய்வதற்குரிய ஒரு கருவியாக இணையத்தைக் கையிலெடுக்கின்றனர்.

“இணைய வன்முறைகள் என்னை மனதளவில் பாதிக்கின்றன. உதாரணத்திற்கு, முஸ்லிம் திருமண விவாகரத்து சட்டத்தினைப் பற்றி எழுதினால் இன அடிப்படையிலான வெறுப்பு பேச்சுக்களை எதிர்கொள்வதானது என்னுள் சில பின்னடைவுகளை ஏற்படுத்துவதுடன், அவை தொடர்பான தேடல்களுக்கு தடையாகவும் உள்ளன. இது போன்று பல விடயங்களை உதாரணமாக எடுத்துக் கூற முடியும். தனிப்பட்ட ரீதியில் எனது நடத்தை மற்றும் செயற்பாடுகளை நான் எழுதும் விடயங்களுடன் தொடர்புப்படுத்தி விமர்சிக்கும் போது அதனை எதிர்கொள்வது என்பது உள ரீதியிலான தடுமாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. அத்துடன் நான் இணைய வெளியில் முகநூலில் சுதந்திரமாக செயற்படுவதனைத் தடுக்கும் செயற்பாடாகவும் உள்ளது. நான் எதனைப் பதிவிட்டாலும் என்னைப் பின்தொடர்ந்து இணைய வன்முறைகளை மேற்கொள்ளும் ஒரு குழு இயங்குகின்றது என்ற முன்னெச்செரிக்கை எண்ணம் எனது செயல்களில் ஒரு பின்னடைவினை ஏற்படுத்தி விடுகின்றது. மேலும் இவை நேரடியான அச்சுறுத்தலாகி விடுமோ என்ற அச்சநிலையும் உள்ளது. இது எனது இணைய சுதந்திரத்தினைப் பாதிக்கும் விடயமாகும். அத்துடன் எனது அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தினை முழுமையாகப் பாதிக்கின்ற விடயமாகும்” எனவும் பிரியதர்சினி சிவராஜா குறிப்பிட்டார்.

“சட்டத்தில் வாய்ப்பிருப்பினும் நடைமுறைப்படுத்துவதில் அசமந்த போக்கிருப்பதாக உணரமுடிகிறது” என்கிறார் கேஷாயினி எட்மண்ட். இது போன்ற அனுபவங்களை சில பெண் ஊடகவியலாளர்கள் பெற்றிருக்கிறார்கள். பொலிஸ் நிலையங்கள் கூட முறைபாடு செய்யவருபவர்களையும் முறைப்பாடுகளையும் சரியான முறையில் கையாழ்கின்றனவா என்பதும் இலங்கை போன்ற நாடுகளில் கவனிக்கவேண்டிய ஒரு விடயமாகும்.

இணைய வழி வன்முறைகள் குறித்தும் அக் குற்றங்களுக்கு எதிரான சட்டநடைமுறைகள் குறித்தும் பெரும்பாலான பெண் ஊடகவியலாளர்கள் அறிந்து வைத்துள்ளனர். இருந்தபோதும் இணையவெளி வன்முறைகள் எவை என்பது குறித்து தெளிவில்லாமலும் சிலர் இருக்கின்றனர்.

2010 ஆம் ஆண்டு தொடக்கம் தொடக்கம் இணையக்குற்றங்கள் மிக வேகமாக அதிகரித்து வருவதாகச் CERT நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இணைய வழி குற்றங்களுக்கு எதிராக பிரத்தியேகமான வலுவான சட்டங்கள் இல்லாதபோதும் கூட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். தண்டனைச் சட்டக்கோவையின் சட்டப்பிரிவு 345, 372 மற்றும் சட்டப்பிரிவு 483 ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் குற்றங்கள் இணையவழியில் நிகழ்த்தப்பட்டமை நிருபிக்கப்படும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு எதிராகத் தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும். அதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களம்(CID) மற்றும் சைபர் குற்ற விசாரணை பிரிவு(cyber crimes branch) பிரத்தியேகமாக உள்ளது. எனினும், நீதி கிடைப்பதில் உள்ள தாமதம் இங்கு ஒரு பிரச்சினையாக உள்ளது. அதேவேளை சைபர் பிரிவினர் பல்வேறு இணைய மோசடிகள் மற்றும் இணைய வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் நீதியை அணுகுவதில் உள்ள தயக்க நிலை, பிரச்சினைகள் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சநிலை என்பன இதில் தடைகளாக உள்ளன. குறிப்பாகப் பாதிக்கப்படும் பெண்கள் இவ்வாறான சட்ட நடவடிக்கைகளை அணுகுவதில் உள்ள தயக்க நிலைக்கும் இவையே காரணமாக உள்ளன. எனினும் இணையத் தொழினுட்ப அறிவு என்ற மட்டத்தில் யோசிக்கும் போது அந்த அறிவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதனால் இவ்வாறான இணைய குற்றங்களின் போது சான்றுகளை சேமித்தல், அவற்றை நிரூபணம் செய்ய சான்றாகப் பயன்படுத்தல் போன்ற உபாயங்களின் முக்கியத்துவம் பற்றி அறிவு இங்கு வெகு குறைவாக உள்ளதனால் அவற்றை சரியாக சட்டத்துறைக்கு நிரூபிக்க முடியாத நிலையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாக உள்ளது. இதனால் குற்றவாளிகள் தப்பிக்கும் நிலையும் உருவாகின்றது. மேலும் சமூக வலைத்தளங்களில்; வெறுப்பு பேச்சு, இணைய வன்முறையை எதிர்கொள்பவர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தில் முறையிடு செய்து குறிப்பிட்ட பதிவை நீக்கி விட முடியும்.

பெரும்பாலானோர் மத்தியில் இணையக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான முறையில் தமக்கெதிராக நடத்தப்பட்ட வன்முறைக்காகச் சட்டத்தை அணுகத்தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இது மிகப்பெரிய குறைபாடாக உள்ளது. பாதிப்பை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிரான செயற்பாடுகளில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுதல் அவசியம். பாதுகாப்பான இணையப் பாவனை என்பது அடிப்படை மனித உரிமையாக உள்ளது. எனவே பெண் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல அனைவருமே இணைவழி வன்முறைகள் குறித்தும் அதை எவ்வாறு அணுகவேண்டும் என்பது குறித்தும் அறிந்து வைத்திருக்கவேண்டும்.

நன்றி - http://www.bakamoono.lk/

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image