பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் சந்தா வழங்கும் இயந்திரங்கள் அல்ல...

பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் சந்தா வழங்கும் இயந்திரங்கள் அல்ல...

"பெருந்தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் சந்தா கொடுக்கின்ற இயந்திரங்களாக மாத்திரம் இருக்கக்கூடாது.

தொழிற்சங்கங்களில் தீர்மானம் எடுக்கின்ற அல்லது கொள்கை வகுக்கின்ற தொழிற்சங்க தலைமையிலும் அவர்கள் இருக்கவேண்டும். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது."

- இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழக்கும், பால்நிலை சமத்துவத்தை வலியுறுத்தும் 16 நாட்கள் வேலைத்திட்டத்தை முன்னிட்டு, எமது இணையதளத்திற்கு வழங்கிய தொலைபேசி ஊடான செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த செவ்வியின் முழு விபரம்....

கேள்வி - கொவிட்-19 உலக பரவல் நோயானது பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வில், குறிப்பாக பெண் தொழிலாளர்களின் வாழ்வில் எப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது?

 பதில் - பெருந்தோட்ட தொழில் துறையில் பெண்கள் தான் தற்போது கூடுதலாக வேலை செய்கின்றனர். தேயிலை மலைகள் நூற்றுக்கணக்கானவர்கள் வேலை செய்கின்ற இடமாகும். அங்கு அவர்களை பார்க்கும்போது அவர்களுக்கு கொரோனா தொற்றக்கூடிய வாய்ப்பு அதிகளவில் இருக்கின்றது. அவர்கள் தங்களது பணியிடத்தில் சமூக இடைவெளியை பேணுவதற்கோ அல்லது முகக்கவசம் என்பதற்கோ அல்லது அடிக்கடி கைகளைக் கழுவதற்கான வசதிகளோ இல்லை. அரச நிறுவனங்கள், ஆடைத் தொழிற்சாலைகளில் இந்த வசதிகள் இருக்கின்றன. ஆனால், தோட்டத் தொழில் துறையில் பெண் தொழிலாளர்களுக்கு இந்த வசதிகள் எதுவும் இல்லை. எனவே, ஏனைய தரப்பினரைவிட இவர்கள் பாதிக்கக் கூடிய அவதானம் அதிக அளவில் இருக்கின்றது.

எனவே, கொரோனா பாதுகாப்புக்கான வேலைத்திட்டத்தை அரசாங்கமும், தோட்டங்களும் நிர்வாகமும் இணைந்து செயல்படுத்த வேண்டும். குறிப்பாக சமூக இடைவெளியை பேணுவதற்கு நடவடிக்கை எடுத்தல், முகக்கவசங்களை பெற்றுக்கொடுத்தல் முதலானவற்றை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இதேநேரம், தோட்டப்புறங்களில் உள்ள யுவதிகள் தான் பெருமளவில் ஆடை தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் தான் முதலாவதாக பாதிப்பு ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்கள் ஊடாக மலையக பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது. கொழும்பிலிருந்து பணியை செய்துவிட்டு வீடுகளுக்கு திரும்பும் பெண்களை14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கு தோட்டப்புறங்களில் தனிமைப்படுத்த முகாம்கள் இல்லை. தனிமைப்படுத்தல் முகாம் என்று கூறி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் சில பாடசாலைகளை பயன்படுத்துகின்றனர். எனவே அதற்கான வசதிகள் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் ஊடாக தான் மலையக மக்களை கொரோனா தொற்றிலிருந்து இருந்து பாதுகாப்பு பாதுகாக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும். அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது.

மறுபுறத்தில் 10,000 மற்றும 5000 ரூபா நிவாரணங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் இது பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக சென்றடையவில்லை. இது அரசியல் மயப்படுத்தப்பட்ட நிலைமையில் இருக்கின்றது.

கேள்வி - தற்போது மலையகத்தில் கொவிட் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், அவர்கள் சுகாதார பாதுகாப்பற்ற நிலையில் வேலை செய்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்கங்களின் ஏன் கூடுதல் கவனம் செலுத்தவில்லை?

பதில் - தொழிற்சங்கங்களுக்கு ஒரு அரசாங்க நிறுவனத்தைப்போலவோ அல்லது வசதிபடைத்த நிறுவனங்களை போலவோ இந்த வேலையை செய்வது கடினமானதாகும். ஆனால் தொழிற்சங்கங்களை பொறுத்தளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ஓரளவிற்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இதனை ஒரு சில தொழிற்சங்கங்கள் செய்கின்றன. அரசாங்கத்துடன் இருக்கின்ற தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருட்களை தங்களது தொழிற்சங்கம் ஊடாக வழங்குவதாக அதை செயல்படுத்துகின்றன. எனவே தொழிற்சங்கங்களிடமிருந்து நாங்கள் பெரிதாக எதிர்பார்க்க முடியாத நிலை உள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் அரசாங்கம், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் ஊடாக இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட வைத்தியசாலை, ஆதார வைத்தியசாலையில் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றனர். அரசாங்க கட்டமைப்பில் செய்யப்பட வேண்டிய வேலைகளை தொழிற்சங்கங்களிடமிருந்து எதிர்பார்ப்பது நியாயமில்லை. வரையறுக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் செய்வார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் மலையகத்தில் உள்ள அரசாங்க சார்பு தொழிற்சங்கங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் சில சில வேலைத்திட்டங்களை செய்கின்றன. அதை தவிர்த்து ஏனைய சிறு சிறு தொழிற்சங்கங்கள் இதனை செய்யும் என்று எதிர்பார்ப்பது முடியாத காரியமாகும். தொழிற்சங்கங்களை கொண்டுநடத்துவதில் அவர்களுக்கு சிக்கல்நிலை உள்ளது. ஆனால் தொழிற்சங்கங்கள் மனசாட்சியின் அடிப்படையில் தங்களுக்கு இருக்கின்ற வரையறுக்கப்பட்ட வளங்களின் ஊடாக கொரோனா தொற்றில் மலையக மக்கள் பாதுகாப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

கேள்வி - 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என உறுதி அளித்திருக்கிறார். இந்த ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுமா? அல்லது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் ஏமாற்றப்படுவார்களா?

பதில் - இது சாத்தியமாவதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவு. ஏனென்றால் தோட்ட கம்பனிகளும், கையொப்பமிடுகின்ற தொழிற்சங்கங்களும் இணைந்துதான் இந்த சம்பள உயர்வை தீர்மானிக்க வேண்டும். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின்போது 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்காக ஒரு அமைச்சு அதற்கான பங்கைக் கொடுத்து மற்றுமொரு அமைச்சு அதற்கான அரைவாசி நிதியை கொடுக்காத காரணத்தினால் அந்த பணிகள் அப்படியே நின்று விட்டன. ஆகவே, இந்த முறை ஆயிரம் ரூபா வழங்குவதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கினாலும்கூட, இந்த பட்ஜெட்டில் ஒதுக்கலாம். அடுத்த அடுத்த பட்ஜெட்டில் ஒதுக்க முடியுமா? ஐந்து வருடங்களுக்கும் இவ்வாறாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி சம்பளத்தைக் கூட்டிக் கொண்டு செல்ல முடியுமா? அது முடியாது. ஆகவே, இது அரசியல் உள்நோக்கத்தில் சொல்லப்பட்ட ஒன்றாக இருக்கின்றதே தவிர, நடைமுறை சாத்தியம் மிகக் குறைவு என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பு. இதையும் மீறி இதனை கொடுப்பதற்கு கட்டாயமாக கம்பனிகள் இணங்க வேண்டும். கம்பனிகள் ஒத்துக்கொள்ளாத வரையில், கம்பனிகளில் முக்கியமான நிறைவேற்றுத்துறை பேச்சாளர்கள் சொல்லியிருக்கிறார், எங்களுடன் ஒன்றும் பேசவில்லை எங்களுக்கு இதைப் பற்றி தெரியாது என்று சொல்லி இருக்கிறார். ஆகவே இந்த அடிப்படையில் பார்க்கும்போது ஜனவரியில் கொடுக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்ட அந்த சம்பள உயர்வு கிடைக்குமா என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.

கேள்வி - பெருந்தோட்டத்துறையில் அதிக அளவில் பெண்கள் பணியாற்றுகின்றபோதும், தொழிற்சங்கத்தில் தலைமைத்துமோ அல்லது முக்கியமான பதிவிகளோ வழங்கப்படாமல் அவர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள்?

பதில் - கட்டாயமாக தொழிற்சங்கங்களில் மாத்திரமன்றி அரசியல் கட்சிகளிலும் அந்த நிலைமை வரவேண்டும். இப்போதைக்கு உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவம் வழங்கப்படும் வேண்டும் என்ற ஒரு மட்டத்திற்கு வந்திருக்கின்றது. தொழிற்சங்கசங்கங்களில்கூட அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டியது மிக முக்கியமான கடமை. ஏனென்றால் கூடுதலாக பெண் தொழிலாளர்களை கொண்டிருப்பதுதான் தொழிற்சங்கம். ஆகவே, அவர்கள் சந்தா கொடுக்கின்ற இயந்திரங்களாக மாத்திரம் இருக்கக்கூடாது. தொழிற்சங்கங்களில் தீர்மானம் எடுக்கின்ற அல்லது கொள்கை வகுக்கின்ற தொழிற்சங்க தலைமையிலும் அவர்கள் இருக்கவேண்டும். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஒரு சில தொழிற்சங்கங்களில் இந்தவிதமான நிலைமை இருக்கின்றது. தோட்டத் தொழிற்சங்கங்களில் பெண்கள் தலைவியாக இருப்பதை எங்காவது ஒரு இடத்தில் அரிதாக பார்க்கலாம். நிர்வாக சபையில் ஓரிருவர் இருப்பதாக இருக்கின்றது. தொழிற்சங்க நிறைவேற்று சபையில் 15, 20 பேர் இருந்தால் அதில் ஓரிருவர் கூட பெண்கள் இருப்பதில்லை. இதுவே யதார்த்தமான ஒரு நிலையாக இருக்கின்றது. இதனை மாற்றியமைக்க வேண்டும். எனவே இந்த விடயத்தில் ஒவ்வொருவரின் நிலைமையை கூறி நாங்கள் திருப்தி அடைய முடியாது.

செவ்வி - கிஷாந்தன் - செய்தியாளர்

Author’s Posts