நிரந்தர சேவையில் இணைக்குமாறு கோரும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
பயிற்சி பூர்த்தியாகி 5 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் நிரந்தர சேவையில் இணைக்குமாறு பொதுசேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபை அமைச்சருக்கு பட்டதாரி பயிலுநர்களாக இணைக்கப்பட்ட பட்டதாரிகள் சார்பாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி இரண்டாம் கட்டமாகவும் 2019ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ம் திகதி மூன்றாம் கட்டமாகவும் இணைக்கப்பட்ட பட்டதாரிகள் பயிற்சியை நிறைவு செய்து ஐந்து மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் இதுவரை நிரந்தர சேவைகள் இணைத்துக்கொள்ளாமை தொடர்பில் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையத்தின் தலைவர் லக்மால் திஸாநாயக்கவின் கையெழுத்துடன் அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
ஒரு வருட பயிற்சியின் கீழ் கடந்த 2019ம் ஆண்டு சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுநர்களின் பயிற்சியானது ஒரு வருடங்கள் பூர்த்தியடைந்து தற்போது மேலும் ஐந்து மாதங்கள் கடந்துள்ளன. எனினும் நிரந்தர நியமனம் வழங்குவது குறித்த தினம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட நேரம் ஒதுக்கித் தருமாறு பல தடவைகள் உங்களிடம் கேட்டுள்ளோம். எனினும் இதுவரை குறித்த விடயம் தொடர்பில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. பல தடவைகள் செயலாளரை சந்தித்து வாய் மொழியாகவும் கடிதம் மூலமாகவும் இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளோம்.
தற்போது தெற்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது என்றும் மத்திய மாகாணத்தில் நேர்முகத்தேர்வு இவ்வாரம் நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டதாரி பயிலுநர்கள் கொவிட் 19 காலப்பகுதியிலும் தொடர்ச்சியாக கடமையாற்றி வந்துள்ளதுடன், அவர்கள் எவ்வித மேலதிக கொடுப்பனவும் பெறாமல் கடமையாற்றி வருகின்றனர். 04/2013 அரச நிர்வாக சட்டநிரூபத்திற்கமைய, கிடைக்கவேண்டிய மகப்பேற்று விடுமுறை உட்பட பல விடுமுறைகள் இல்லாமலாக்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து தற்போது பாதிக்கப்பட்டுள்ள ஒரு வருட பயிற்சியை நிறைவு செய்துள்ள பயிலுநர் பட்டதாரிகளுக்கு பயிற்சி பெற்று ஒரு வருடம் பயிற்சியை பூர்த்தி செய்த நாளுக்கு அடுத்த நாள் தொடக்கம் நிரந்தர சேவையில் இணைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோருவதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.