ஐக்கிய அரபு இராச்சியத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வார இறுதி நாள் விடுமுறை தொடர்பான தௌிவுக்காக பல தனியார்துறை ஊழியர்கள் காத்திருக்கும் சார்ஜாவை தளமாக கொண்ட தனியார் நிறுவனமொன்று 3 வாரஇறுதி நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இப்புதிய வார இறுதி விடுமுறை நாட்கள் நடைமுறைக்கு வரும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் நான்கரை நாட்கள் வேலை நாளாகவும் இரண்டரை நாட்கள் வார இறுதி விடுமுறை நாளாகவும் ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்திருந்த நிலையில் இந்நிறுவனம் மூன்று நாட்கள் வார இறுதி நாட்களை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று குறித்த தனியார் நிறுவனத்தின் அறிவிப்பானது சார்ஜாவின் வார இறுதி மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. இதனை அரச நிறுவனங்களிலும் செயற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவன ஸ்தாபகர் என்ற வகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் நெகிழ்வுத் தன்மை மிக்க புதிய தொழிற்சட்டத்தை பயன்படுத்திக்கொள்ள எண்ணினோம் என்கிறார் ரோய்யா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் பணிப்பாளர் அப்தல் ரஹ்மான் சேலம்.
தனியார் நிறுவனங்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் புதிய வார இறுதியை வர்த்தக இலகுத்தன்மை மற்றும் செயற்பாடுகளுக்கமைய தமக்கு ஏற்றாற்போல் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார் அந்நாட்டின் மனித வள மற்றும் அமீரக அமைச்சர் டொக்டர் அப்துல் ரஹ்மான் அவார்.
நீண்ட வார இறுதி நாட்கள் ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் நல்வாழ்வை அதிகரிக்கும் என்று சேலம் தெரிவித்துள்ளார். ஐஸ்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஆரோக்கியம் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதில் நான்கு நாள் வேலை வார சோதனைகள் குறித்து அறிக்கை அளித்துள்ள நேர்மறையான முடிவுகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.