ஐக்கிய அரபு இராச்சியத்தில் தேசிய தடுப்பு வழங்கல் திட்டத்தினூடாக மார்ச் மாதம் இறுதியளவில் நாட்டின் 80 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தடுப்பூசி தொடர்பாக மக்கள் மத்தியில் காணப்படும் தவறான கருத்துக்களை நீக்குவதற்கான முயற்சிகளிலும் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். தொற்று ஏற்பட்டாலும் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு தொற்று நீக்கப்படும் என்று சிலர் நம்புகின்றனர். இது மிகவும் தவறான கருத்து என்கிறார் அந்நாட்டு சுகாதாரதுறை உத்தியோகப்பூர்வ பேச்சாளர் டொக்டர் பரீதா அல் ஹொசானி.
இந்த தொற்றானது அவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. தொற்று ஏற்பட முதலே தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 தடுப்பு மருந்துகளுக்கு அனுதி வழங்கப்பட்டுள்ளது. சீன தயாரிப்பான சினோபார்ம் (Sinopharm vaccine) 100 வீதம் கொவிட் 19 இற்கு எதிராக செயற்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் அனைத்து தடுப்பு மருந்துகளும் பாதுகாப்பானவை, செயற்றிறன் மிக்கவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.