கொரியாவில் தொழில்வாய்ப்பினை எதிர்பார்த்துள்ள தகுதி பெற்ற 5800 பேர் எதிர்வரும் சில மாதங்களில் தொழில்வாய்ப்பினை நாடி செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கும் கொரிய மனித வள அமைச்சின் பணிப்பாளர் மற்றும் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி லீக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்த இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
கொரிய தொழில்வாய்ப்பினை நாடி செல்ல தகுதி பெற்றவர்களை அங்கு அனுப்புவதற்கு ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் மனுஷ நாணயக்கார கொரிய மனித வள அமைச்சுக்கு சுட்டிக்காட்டினார். குறித்த விடயம் தொடர்பில் சாதகமான தீர்வை பெற்றுத் தருவதாக உறுதியளித்த வதிவிட பிரதிநிதி, எதிர்வரும் 6 மாதங்களுக்குள் தகுதி பெற்ற 5800 பேரை நாட்டுக்கு அழைத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் வாரம் தொடக்கம் வாரத்திற்கு ஒரு விமானத்தில் 200 இலங்கைத் தொழிலாளர்கள் என்றவகையில் கொரியா அனுப்பப்படவுள்ளதுடன் அதன் தொடர்ச்சியாக வாரத்திற்கு 2 என்ற வகையில் அதிகரிக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மேலும் அதிக தொழில்வாய்ப்புக்களை வழங்குமாறு விடுக்கப்பட்ட அமைச்சரின் கோரிக்கைக்கு வதிவிட பிரதிநிதி சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.